கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து

🕔 March 11, 2017

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் உத்தியோகபூர்வ வாகனங்களிலொன்று, இன்று சனிக்கிழமை அதிகாலை அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இதன்போது, வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

சுகாதார அமைச்சருக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட PE 2514 எனும் இலக்கத்தையுடைய வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் விபத்து இடம்பெற்றதாகவும், இதன்போது வாகனத்தினுள் மூவர் பயணித்தனர் எனவும் அறிய முடிகிறது.

அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் அமைந்துள்ள ‘பேபி கெயார்’ எனும்  வியாபார நிலையத்தின் இரும்புக் கதவில் மோதுண்ட நிலையில், மேற்படி வாகனத்தினை அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளர். குறித்த வியாபார நிலையத்தின் இரும்புக் கதவு, முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, வாகனத்தின் முன் சக்கரமொன்று விபத்தின் போது, வேறாகக் கழன்றுள்ளது.

விபத்தின் போது காயமடைந்தவர்கள் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.

Comments