பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் றிசாட் பங்கேற்பு
பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை லண்டனில் ஆரம்பமானது. பொதுநலவாய புத்தாக்க மற்றும் முதலீட்டு கவுன்ஸில் பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கின்றது.
அத்துடன் நாடுகளுக்கிடையிலான உத்தியோகப்பற்றற்ற தொடர்புகளைப் பயன்படுத்தி, எந்தெந்த நாடுகளுக்கு அந்தத் தொடர்புகள் மூலம் உதவிகளை நல்க முடியும் என்பதை இந்த மாநாடு ஆராய்கிறது. மேலும், பிராந்தியத்தில் பொதுநலவாய அங்கத்தவர்களின் அங்கத்துவத்தை பூரணப்படுத்துவதிலும் இம்மாநாடு ஆர்வம் செலுத்தும். அத்துடன் உத்தியோக பூர்வமான வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் இம்மாநாடு கவனம் செலுத்தும்.
பொதுநலவாய வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டுக்கான தலைமையை அடுத்த வருடம் ஏற்கவிருக்கும் ஐக்கிய ராச்சியமும், மோல்டாவும் இணைந்து மாநாட்டை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தன.
பொதுநலவாய அமைப்பு 53 நாடுகளை சுயாதீனமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. உலக சனத்தொகையில் 3 ஆம் நிலையிலுள்ள 2.2 பில்லியன் மக்களை இந்த நாடுகள் கொண்டுள்ளன. உலகின் பெரிய நாடுகளும், சிறிய நாடுகளும் பணக்கார மற்றும் ஏழை நாடுகளும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 31 நாடுகள் சிறிய ராச்சியங்களாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான நாடுகள் தீவுகளாகவும் இருக்கின்றன.
2014 ஆம் ஆண்டு பொதுநலவாய நிறுவனங்களின் முதலீட்டுக் கவுன்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது. முதலீட்டையும் வர்த்தகத்தையும் பொதுநலவாய நாடுகளிடையே ஊக்குவித்து வியாபாரத்தை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.