வட்டியில்லா கடன் திட்டம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் ஆரம்பம்
– யூ.கே. காலித்தீன்-
வட்டியில்லா கடன் உதவித் திட்டமொன்றினை, சாய்ந்தமருது – மாளிகைகாடு ஜும்ஆ பெரியபள்ளிவாசல் சபை ஆரம்பிக்கவுள்ளது.
இத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது.
“வட்டி வாங்காதீர்கள், வட்டி கொடுக்காதீர்கள்” எனும் தொனிப்பொருளில், சாய்ந்தமருது ஜும்ஆ பெரியபள்ளிவாசலில் விஷேட மார்க்க சொற்பொழிவுடன், மக்தப் அத்-தகாபுல் இஸ்லாமிய நிதி நிறுவனம் (வட்டியில்லாக் கடன் உதவித் திட்டம்) ஆரம்பமாகவுள்ளது.
இஸ்லாமிய வரையறைக்குட்பட்டும், சமூக நலன் கருதியும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரியபள்ளிவாசல் மரைக்காயர், உலமா சபை, ஸகாத் நிதியம், வர்த்தகர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோர் ஒன்றிணைந்து “வட்டி ஒழிப்பு” என்ற நன்நோக்கில் எடுத்த கூட்டு முயற்சியே மேற்படி இஸ்லாமிய நிதி நிறுவனமாகும்.
இந்த முயற்சியினை வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் பொருட்டு, சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச பொதுமக்கள், முடியுமான அளவு பங்குகளை கொள்வனவு செய்து (பங்கு ஒன்றின் விலை 1000 ரூபாயாகும்), சேமிப்புக் கணக்கொன்றையும் ஆரம்பித்து அதில் குறைந்தது 500 ரூபாவை வைப்புச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.