காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம்

🕔 February 28, 2017

ளுத்துறை சிலைச்சாலை பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அங்கொட லொக்கு எனும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதலில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான சமயன் என்பவர் உட்பட 07 பேர் பலியாகி இருந்தனர். இவர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களாவர்.

சமயன் குழுவினருக்கும், அங்கொட லொக்கு குழுவினருக்குமிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினையின் தொடர்ச்சியாகவே, நேற்றைய தாக்குதல் இடம்பெற்றிருந்ததாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார்.

“நேற்றைய தினம் சமயனைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு சிறைச்சாலை பஸ் வரும் பாதை தெரிந்திருந்தது. அவர்கள் பொலிஸார் அணியும் காக்கி நிற ஆடைகளை அணிந்து கொண்டு, இரண்டு மணி நேரமாகக் காத்திருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலின் பின்னர் வேன் ஒன்றில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள்” என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க விபரித்தார்.

இதேவேளை, தாக்குதல்தாரிகள் மிகவும் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், தாக்குதலுக்காக ரி. 56 துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் அவர் கூறினார். அங்கொட லொக்குவுடன் பிரபல்யமிக்க இன்னும் பல பாதாள உலகத்தவர்களும் இந்தத் தாக்குதலில் பங்கு கொண்டுள்ளனர்.

தொடர்பான செய்தி:சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்