மகன் செலுத்திய பஸ்ஸில் சிக்குண்டு, தந்தை பலி
– க. கிஷாந்தன் –
மகன் செலுத்திய பஸ் வண்டியில் சிக்குண்டு, தந்தை பலியான சம்பவமொன்று, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
டயகமவிலிருந்து போடைஸ் வழியாக, ஹட்டன் செல்லும் தனியார் பஸ் சாரதி, தனது பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் தரித்து வைப்பதற்காக செல்லும் வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பஸ்ஸை பின்நோக்கி செலுத்தும் பொழுது, வீதி ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த 86 வயதுடைய முதியவர் பஸ்ஸின் பின்பகுதி சில்லில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மேற்படி பஸ்ஸை செலுத்திய சாரதியின் தந்தை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் ஆறுமுகம் மாரியப்பன் (வயது 86) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில், பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், குறித்த பஸ்ஸை பொலிஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.