தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும்

🕔 February 27, 2017

-அஹமட் –

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தொடர்ந்தும் எம்.எச்.எம். சல்மான் வகித்து வருகின்றபோதும், அது குறித்து சொரணையற்றிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர்.

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எம்.எச்.எம். சல்மானிடமிருந்து பெற்று, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு வழங்கவுள்ளதாக பேச்சுக்கள் வெளியாகியிருந்தன. அப்போது, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மு.கா.வின் உயர்பீட உறுப்பினர்கள்,’கச்சை’ கட்டிக் கொண்டு, கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். அத்தோடு, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினை இவ்விடயத்தில் தலையிடுமாறு கோரிய மேற்படி உயர்பீட உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவரின் தலைமையில் கூட்டமொன்றினையும் நடத்தினர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்கிய வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலினூடாக அப்பிரதேச உயர்பீட உறுப்பினர்கள் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

மேலும், மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ஹசனலி பெற்றுக் கொள்வது, அட்டாளைச்சேனை மக்களுக்கு செய்கின்ற துரோகம் எனவும் உயர்பீட உறுப்பினர்களில் சிலர் அறிக்கை விட்டனர்.

ஆயினும், ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் சல்மான் அந்தப் பதவியை வகித்து வருகின்றார். ஆனால், தற்காலிகமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதாக கட்சித் தலைவரால் கூறப்பட்ட சல்மான், 18 மாதங்களுக்கும் மேலாக அந்தப் பதவியினை வகிக்கின்றமை, அட்டாளைச்சேனையில் கச்சை கட்டிய உயர்பீட உறுப்பினர்களின கண்களில் படவில்லையா எனவும், அப் பிரதேச மக்கள் கேட்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஹசனலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு எதிராக கோசமிட்ட அட்டாளைச்சேனை உயர்பீட உறுப்பினர்கள், அந்தப் பதவியினை தொடர்ந்தும் சல்மான் வைத்திருக்கின்றமை குறித்து சொரணையற்றிருப்பது ஏன் எனவும் மக்கள் கேட்கின்றனர்.

மேற்படி உயர்பீட உறுப்பினர்களின் இந்த நடவடிக்கையானது ‘வைக்கோல் பட்டறைக் கதை’யினை நினைவுபடுத்துவதாகவும், அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை சல்மான் 18 மாதங்களாக வைத்திருக்கின்றமைக்கு எதிராக, முடிந்தால், மு.கா.வின் அட்டாளைச்சேனை உயர்பீட உறுப்பினர்கள் வாயைத் திறந்து  பகிரங்கமாகப் பேசட்டும் எனவும், அப்பிரதேசத்தின் கட்சித் தொண்டர்கள் சவால் விடுக்கின்றனர்.

மேலும், ஹசனலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படுவதாக கதைகள் கிளம்பிய போது, தேசியப்பட்டியல் தொடர்பில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற்றுவதற்கு அட்டாளைச்சேனை பெரிய பள்ளி நிருவாகத்தினரை வற்புறுத்தியவர்கள், அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை சல்மான் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு எதிராகவும் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வற்புறுத்தல் விடுக்க வேண்டுமென்றும் இப் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்