தனியன்களின் கூட்டு

🕔 February 22, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

மிருகத்தை மனிதன் கொன்றால், அது வீரம். மனிதனை மிருகம் கொன்றால் அது பயங்கரம் என்றார் பேர்னாட்ஷா. இதிலுள்ள நையாண்டி அற்புதமானது. மனிதர்கள் தமக்குச் சாதமாகக் கட்டமைத்து வைத்துள்ள அபத்தங்களை பேர்னாட்ஷாவின் இந்த வாசகம் ரசனையுடன் கேலி செய்கின்றது. இங்கு மனிதன் – மிருகம்; குறியீடுகளாக இருக்கின்றன. தங்கள் அதிகாரங்களையும், வலிமையினையும் நிரூபித்துக் கொள்வதற்காக, ‘வேட்டை’யாடுகின்றவர்களின் முகத்தில் பேர்னாட்ஷாவின் வரிகள், காறி உமிழ்கின்றன.

அதிகாரத்தில் உள்ளவர்கள் தமக்குக் கீழிருப்பவர்களைத் தண்டிப்பதையும், அதிகாரத்தில் இருப்பவர்களை அவர்களின் கீழ் உள்ளவர்கள் எதிர்ப்தையும், நமது பாமர சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதைத்தான் பேர்னாட்ஷா இவ்வாறு கேலி செய்கிறார். ‘தலைவர்கள் உன்னைத் தண்டித்தாலும், தலைவர்களை நீ எதிர்ப்பது – மன்னிக்க முடியாத பாவமாகும்’ என்று, தலைவர்களாலேயே உருவாக்கி விடப்பட்டுள்ள மந்திரங்களை, பேர்னாட்ஷவின் வார்த்தைகள் புரட்டிப் போடுகின்றன.

ஆட்சியாளர்களும் தலைவர்களும் கடவுளின் பிரதிநிதிகள் என்று புனையப்பட்ட – பண்டைய கோட்பாடுகளை, பகுத்தறிவு வாதங்கள் எவ்வளவுதான் சிதைத்துப் போட்டு விட்டாலும், அரசியல் சமுத்திரத்தில் அதன் எச்ச சொச்சங்கள் இன்னும்; சிறு தூசிகளாக மிதந்துகொண்டே இருக்கின்றன. இதனால்தான், தலைவர்கள் இன்றும் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர்களின் கதிரைகள் தப்ப வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியல் ஆரம்பமான பின்னர், தலைவர்களின் பலி பீடத்தில், அநியாயமாகப் காவு கொள்ளப்பட்ட முதலாவது நபர் – சேகு இஸ்ஸதீன் ஆவார். ஓர் உண்மையினை உரத்துச் சொன்னதற்காக அவர் தண்டிக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு, அட்டாளைச்சேனையில் தேசிய கல்விக் கல்லூரியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அந்த மேடையில் உரையாற்றிய மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் “அடுத்த தேர்தலிலும் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்று, பிரேமதாஸவைப் பார்த்துக் கூறினார். அடுத்த நாள் பத்திரிகைகளில் அஷ்ரப்பின் உரை தலைப்புச் செய்திகளாக வந்தன.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரசின் அப்போதைய தவிசாளர் சேகு இஸ்ஸதீன், அதற்கடுத்த தினங்களில் ஊடகங்களுக்கு ஒரு செய்தியினைச் சொன்னார். அதாவது “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியாக பிரேமதாஸவை மீண்டும் தெரிவு செய்வதென்பது மு.காங்கிரசின் கொள்கைக்கு முரணானது. மேலும், அடுத்த ஜாதிபதித் தேர்தலில் யார் இருப்பார், யார் இல்லாமல் போவார் என்பதெல்லாம் தெரியாது. எனவே, எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு மு.கா. ஆதரவு வழங்குவது என்பதை, தேர்தல் கால கட்டங்களில்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும், பிரேமதாஸவுக்கு – அடுத்த தேர்தலில் ஆதரவு வழங்குவதாக மு.காங்கிரஸ் தீர்மானங்கள் எவற்றினையும் இதுவரை எடுக்கவுமில்லை. ஆகவே, அடுத்த முறையும் ஜனாதிபதியாக பிரேமதாஸ தெரிவாக வேண்டுமென, மு.கா. தலைர் அஷ்ரப் கூறியிருந்தால், அது அவரின் தனிப்பட்ட விருப்பமாகவே கருதப்பட வேண்டும். மு.காங்கிரசின் தீர்மானமாக அது இல்லை” என்று தெரிவித்தார்.

சேகுவின் அந்த அறிக்கை அஷ்ரப்பை ஆத்திரமூட்டியது. ஆனாலும், சேகு இஸ்ஸதீன் ஊடகங்களுக்கு தெரிவித்த அத்தனையும் நியாயமான உண்மைகளாகும். இருந்தபோதும், மு.கா.வின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனை கட்சியிலிருந்து அஷ்ரப் வெளியேற்றினார். நியாயமின்றித் தண்டித்தார். இந்த நிலையில், சேகுவை அஷ்ரப் தண்டித்தமையினை மு.காங்கிரசைச் சேர்ந்தோரில் அதிகமானோர் நியாயப்படுத்தினார்கள். இன்னும் ஒரு தரப்பினர் அந்த அநியாயத்துக்கு மௌனத்தினால் துணை போனார்கள். வெகு சிலர்தான், சேகுவுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை ‘அநியாயம்’ என்று சொல்லத் துணிந்தார்கள்.

மு.காங்கிரசுக்குள் இப்படி பிழையாகவும், சரியாகவும் தண்டிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளமானது. இந்தப் பட்டியலில் இப்போதைக்குள்ள கடைசி மனிதர், அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலியாவார். முன்னாளர் அமைச்சர் அதாஉல்லா, அமைச்சர் றிசாத் பதியுத்தீன், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீரலி, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் இந்தப் பட்டியலிலுள்ளலுள்ள முக்கிய புள்ளிகளாவர். மு.காங்கிரசில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தவிசாளர் பசீர் சேகுதாவூத், இந்தப் பட்டியலில், ஹசனலிக்கு முந்தைய நபராக உள்ளார்.
மேலுள்ளவர்கள் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகியும், விலக்கப்பட்டும் வெளியேறியவர்களாவர். இவர்கள் ஒவ்வொருவரும் மு.கா.விலிருந்து வெளியேறியபோது கட்சித் தலைவரின் தீவிர விசுவாசிகளால் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். பாவிகளாகப் பார்க்கப்பட்டனர். ஆனாலும், மு.கா.விலிருந்து இவ்வாறு பிரிந்தவர்களில் எவரும், கட்சிக் கொள்கைகளோடு முரண்பட்டு பிரிந்து செல்லவில்லை. கட்சித் தலைவருடன் முரண்பட்டு, முட்டி மோதிய நிலையிலேய பிரிந்து வெளியேறினர்.

இவர்கள் எல்லோரும் மு.கா.விலிருந்து ஒட்டு மொத்தமாக விலகிச் செல்லவில்லை. தனியன்களாகவும், தனியாட்களாகவுமே பிரிந்து சென்றனர். மு.கா. தலைவர் ஹக்கீமோடு அதாஉல்லா முரண்பட்ட போது, ஹக்கீமுடைய தலைமையினைக் காப்பாற்றுவதற்காக அதாஉல்லாவை பசீர்சேகுதாவூத் எதிர்த்து நின்றார். இப்போது ஹக்கீமோடு முட்டி மோதிய நிலையில் பசீர் – வெளியே நிற்கின்றார்.
மு.கா. தலைவருடன் முரண்பட்ட நிலையில் கட்சிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களில் அதாஉல்லாவும், றிசாத் பதியுத்தீனும் தனிக் கட்சியமைத்துக் கொண்டு, தமது அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். ஹிஸ்புல்லாஹ் மற்றும் நஜீப் ஏ. மஜீத் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டு, தங்கள் அரசியல் பயணத்தினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ஹக்கீமை எதிர்த்து மு.கா.விலிருந்து வெளியேறிய மேற்படி தனியன்களும், தனியாட்களும் ஒன்று சேர்ந்து, ஒரு கூட்டணி அரசியலைச் செய்வதற்கான முயற்சியொன்று அரசியல் அரங்கில் இடம்பெற்று வருகின்றது. கிட்டத்தட்ட இதற்கான உடன்பாடுகளும் எட்டப்பட்டு விட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.

மேற்படி கூட்டு முயற்சியானது மு.கா. தலைவருக்கு அரசியல் ரீதியாகவும், அதற்கு வெளியிலும் மிகப் பெரும் சவாலாக அமையும் என்பதை மறுக்க முடியாது. கட்சியில் தனக்கு பிரச்சினையானவர்களை ‘வெளியில் போடுவதை’ ஒரு தந்திரோபாய அரசியலாகச் செய்து வந்த மு.கா. தலைவர் ஹக்கீம்ளூ தன்னால் பலிகொள்ளப்பட்ட அத்தனை தனியன்களும், கூட்டாகச் சேரும் அரசியல் செயற்பாட்டினை எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

அதாஉல்லாவை, றிசாத்தை, ஹிஸ்புல்லாஹ்வை தனித்தனியாக எதிர்கொள்வதற்கே தடுமாறிய மு.கா. தலைவர், இந்தத் தனியன்களின் கூட்டணியினை எதிர்ப்பதும், எதிர்கொள்வதும் லேசுப்பட்ட காரியமாக இருக்காது என்பதை மட்டும் அடித்துக் கூற முடியும்.

இன்னொருபுறம், ஹக்கீமுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட பலம் பலவீனங்கள் குறித்து எக்கச்சக்கமாக அறிந்து வைத்துள்ள பசீர் சேகுதாவூத் மற்றும் மு.காங்கிரசின் தவிர்க்க முடியாத அடையாளமாக அறியப்பட்ட ஹசனலி ஆகியோரும், மேற்படி கூடணியில் இணைந்து கொள்ளும்போது நிலைமை மிகவும் பாரதூரமாகும்.
மு.கா.விலிருந்து பசீர் மற்றும் ஹசனலியின் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் போது, மு.காங்கிரசின் பிரமுகர்களாக அறியப்பட்ட இன்னும் சிலரின் வெளியேற்றமும் நிகழக்கூடும் என இப்போதே சமூக வலைத்தளங்களில் எழுதப்படுகிறது. யார், யார் அவ்வாறு வெளியேறுவார்கள் என்று பெயர்களைக் குறிப்பிட்டே சிலர் எழுதுகின்றனர். அவ்வாறு எழுதப்படும் அனுமானங்களுக்கான சாத்தியங்கள் மிக அதிகமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமையன்று அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரசேத்தில் பசீர் சேகுதாவூத்துக்கும் இளைஞர்களை மிக அதிகமாகக் கொண்ட குழுவினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த இளைஞர்கள் அனைவரும் மு.காங்கிரசைச் சேர்ந்தவர்கள். குறித்த இளைஞர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கினங்கவே அம்பாறை மாவட்டத்துக்கு பசீர் வந்திருந்தார். மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பு நிறைவடையும்போது கிட்டத்தட்ட இரவு 10 மணியாகி விட்டது. ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமானோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த இளைஞர்கள், கட்சித் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பசீரிடம் தெளிவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

மு.காங்கிரசில் அதிகாரம்மிக்க பதவிகளாக தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகள் இருந்தன. முஸ்லிம் காங்கிரஸ் தீவிர அரசியல் செயற்பாட்டில் இறங்கத் தொடங்கிய காலங்களில் அந்தக் கட்சியின் தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அஷ்ரப் பதவி வகித்த போது, அதன் செயலாளராக ரஊப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். அதாவது, மு.காங்கிரசின் அதிகாரம்மிக்க ஒரு பதவி வடக்கு – கிழக்குக்கு உள்ளேயிருந்தபோது, மற்றைய பதவி வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் பகிரப்பட்டது.

ஆனால், இப்போது மு.கா.வின் தலைவர் பதவி வடக்கு – கிழக்குக்கு வெளியிலுள்ள ரஊப் ஹக்கீமிடம் உள்ளது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் செயலாளர் பதவிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மன்சூர் ஏ. காதர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மன்சூர் ஏ. காதர் நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் பதவியென்பது, கட்சியின் முன்னைய செயலாளர் நாயகம் பதவியினைப் போன்று, அதிகாரம் கொண்ட ஒரு பதவியல்ல. மு.காங்கிரசின் தற்போதைய செயலாளரை மு.கா. தலைவர்தான் நியமிப்பார் என்று கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், செயலாளர் பதவியினை வகிப்பவர், நேரடி அரசியலில் ஈடுபட முடியாது என்றும் தற்போது யாப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான், மு.கா.வின் தற்போதைய செயலாளர் பதவியினை ஒரு ‘வெற்றுச் சாக்கு’ என்று, பசீர் சேகுதாவூத் விமர்சிக்கின்றார். ‘நெல் நிரம்பிய சாக்கினை’ ஹக்கீம் எடுத்துக் கொண்டு, வெற்றுச் சாக்கினை கிழக்கு மக்களிடம் வீசி விட்டார் என்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பசீர் கூறியமைக்கு இந்தப் பின்னணிதான் காரணமாகும்.

மு.காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படும் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மு.கா. தலைவருக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் உரத்துப் பேசப்படும் விடயம், மேற்சொன்ன தலைவர் – செயலாளர் பங்கீடு பற்றியதாகவே உள்ளது. தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளை கட்சிக்குள் பகிர்வதனூடாக இதுவரை இருந்து வந்த, பிராந்திய அரசியல் சமநிலையானது, இப்போது கட்சிக்குள் இல்லாமலாக்கப்பட்டு விட்டதாக கிழக்கில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்தப் பிரசாரம் இன்னும் பகிரங்கமாக பொதுக் கூட்டங்களில் பேசப்படவில்லை. ஆனால், அவ்வாறு ஒரு பிரசாரம் பகிரங்கமாக முன்னெடுக்கப்பட்டு, அதற்கு ஹசனலி தலைமை தாங்குவராயின், ஹக்கீமுக்கு சாதகமற்ற அரசியல் கள நிலைவரம் கிழக்கில் சூடு பிடிக்கத் தொடங்கும்.
இந்த வருடத்துக்குள் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் ஆகியவை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்போது, ஹக்கீமுக்கு எதிரான தனியன்களின் கூட்டணியொன்று களத்தில் இறங்குமாயின், ஏதோவொரு வீதத்தில் மு.கா. வீழ்ச்சியினைச் சத்தித்தே ஆகவேண்டியிருக்கும் என்பதை கண்களை மூடிக்கொண்டு கூறலாம்.

அரசியலில் எதிராளிகளை அருகில் வைத்திருப்பதை விடவும், ‘வெளியில் போடுவது’ ஆபத்தானது என்பதை, மு.கா. தலைவருக்கு உணர்த்தும் தருணமாக, தனியன்களின் கூட்டு அமையும்.

நன்றி: தமிழ் மிரர் (21 பெப்ரவரி 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்