அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

🕔 February 21, 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –

போட்டிப் பரீட்சையின்றி, 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக அரச வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையில், ஆண், பெண் பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த அரசாங்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள், நேர்முகப் பரீட்சைகள் மூலமே அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டமையினை நினைவுபடுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அதேபோன்று, தமக்கும் போட்டிப் பரீட்சையின்றி நேர்முகப் பரீட்சைகள் மூலம் – வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டுமென இதன்போது வலியுறுத்தினர்.

அதேவேளை, பட்டதாரிகளுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும்போது, அவர்கள் பட்டம்பெற்ற ஆண்டின் அடிப்படையில் தொழில்கள் வழங்கப்படுவதோடு, 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட பட்டதாரிகள், தமது கோரிக்கைகளை ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்திய பின்னர், அமைதியாகக் கலைந்து சென்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்