தேசிய வனஜீவராசிகள் சரணாலயங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு இலவச அனுமதி: அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா

🕔 February 21, 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –

நாட்டிலுள்ள 29 வன ஜீவராசிகள் சரணாலயங்களையும் இலவசமாகப் பார்வையிடுவதற்கான அனுமதியினை, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக , நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில், குமண வன ஜீவராசிகள் சரணலாய மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளம் ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு, இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளன தலைவரும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளருமான ஏ.எம். ஜவ்பர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, குமண வன ஜீவராசிகள் தேசிய சரணாலயம் மற்றும் இலங்கையிலுள்ள ஏனைய தேசிய சரணாலயங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை, அமைச்சர் ஜயவிக்கிரம பெரேராவிடம் இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளத் தலைவர் ஜவ்பர் கோரிக்கைகளாக முன்வைத்து உரையாற்றினார்.

இந்தக் கோரிக்கைகளில் ஒன்றாக, தேசிய சரணாலயங்களைப் பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டுமென வேண்டப்பட்டது.
இந்தக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அமைச்சர்ளூ இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மற்றும் பாடாசாலை மாணவர்களுக்கு, தேசிய சரணாலயங்களை இலவசமாக பார்வையிடுவதற்கான அனுமதி விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா 49 வருடங்களாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றமையினை கௌரவிக்கும் வகையில், அவருக்கு நினைவுச் சின்னமொன்றினை இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளன தலைவர் ஜவ்பர் வழங்கி வைத்தார்.

இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகளும், குமண தேசிய சரணாலயத்தினை அபிவிருத்தி செய்வதற்கான தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்