மேலதிக செயலாளர் சலீம், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்
🕔 February 19, 2017
– யூ.கே.காலீத்தீன், எம்.வை.அமீர் –
சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா, நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில், இடம்பெற்றபோதே, அவர் கௌரவிக்கப்பட்டார்.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா (ஜே.பி.) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான இம்ரான் மஹ்றூப் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளருமான கே.எம்.ஏ. ஜவாத் அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கடந்த பத்து வருடங்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றி அப்பகுதியின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றிய ஏ.எல்.எம்.சலீம், அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றமையினைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு நம்பிகையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனிபா மற்றும் சமுர்த்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் ஏ.எம். ஜாஹிர் ஆகியோரும் இந் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.