உப்புக் கருவாடும் ஓராயிரம் கதைகளும்
– முகம்மது தம்பி மரைக்கார் –
‘உப்பு கருவாடு, ஊற வச்ச சோறு, ஊட்டி விட நீ போதும் எனக்கு’ என்று, ‘முதல்வன்’ திரைப்படத்தில் மணிஷா கொய்ராலாவைப் பார்த்து அர்ஜுன் பாடுவார். அதுவொரு இனிமையான பாடல். கதைப்படி, கிராமத்துக் காதலியைப் பார்த்து, நகரத்து இளைஞன் அந்த வரிகளைப் பாடுகின்றான். ஊறவச்ச சோற்றுடன் உப்புக் கருவாட்டைச் சுவைக்கும் பாக்கியம் நகர்புறத்தவர்களுக்கு பெரிதாகக் கிடைப்பதில்லை. சோற்றுக்குள் நீர் விட்டு, அதற்குள் வெங்காயம், கொச்சிக்காயை நறுக்கிப் போட்டு ஊற விட்டு, பின்னர் பிசைந்து, அந்தச் சோற்றுடன் உப்புக் கருவாட்டைக் கடித்து உண்ணும் போது கிடைக்கும் சுவை சொல்லில் அடங்காது. சோற்றுக்குள் நீர் விடுவதற்குப் பதிலாக, தேங்காய் பாலை சிலர் சேர்ப்பார்கள். அது இன்னும் சுவையாக இருக்கும்.
இங்கு வெங்காயம், கொச்சிக்காய் சேர்த்துப் பிசையப்பட்ட சோறுதான் பிரதான உணவாக இருந்தாலும், சோற்றுடன் கடித்து உண்ணும் உப்புக் கருவாடுதான், சுவையை உச்சத்துக்குக் கொண்டு செல்லும். அதுவும் நெருப்பில் சுட்டெடுத்த உப்புக் கருவாட்டுக்கு இன்னும் சுவை அதிமாகும்.
உப்புக் கருவாடு – எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. உப்புக் கருவாட்டுக்கு என்றே, சில இடங்கள் உள்ளன. அங்கு கிடைக்கும் கருவாடுகள் தரமும் சுவையும் கொண்டதாக இருக்கும். திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசம் உப்புக் கருவாடு உற்பத்திக்கு பெயர் பெற்றது. கிண்ணியாவில், திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஓரங்களில் அமைந்திருக்கும் உப்புக் கருவாட்டுக் கடைகள் அதற்கு சாட்சிகளாகும். கடையினுள் நுழைந்து அதன் பின்வழியால் கொஞ்சம் எட்டிப் பார்த்தால், அங்கு நடைபெறும் கருவாட்டு உற்பத்தி, நம்மை மலைக்க வைக்கும்.
கிண்ணியாவில் கடற்கரையை அண்டியிருக்கின்றன அந்தக் கருவாட்டுக் கடைகள். கடைகளின் பின்புறமாக கருவாட்டு உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வகை மீன்களும் குவியலாக இருக்கின்றன. அதனைச் சுற்றி சிலர் உட்கார்ந்து கொண்டு, மீன்களைத் துப்புரவு செய்தும், துண்டாடிக் கொண்டும் இருக்கின்றனர். இன்னொரு புறம் மீன்களை பெரிய தட்டிகளில் காய வைக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர், உலர்ந்த கருவாடுகளை சேகரித்து கடைக்குள் கொண்டு செல்கிறார்கள். அங்கிருந்தவர்களிடம் பேசினோம். உப்புக் கருவாட்டுக்குள் ஓராயிரம் கதைகள் உள்ளன.
கிண்ணியாவிலுள்ள மஹ்றூப் என்பவரின் உப்புக் கருவாட்டுக் கடைக்குள் நுழைந்து, அதன் பின் வழியால் வெளியே வந்தோம். அது கடற்கரையோரமாகும். அங்கு மீன் குவியலொன்றைச் சுற்றி, சிலர் உட்கார்ந்து கொண்டு, அதிலுள்ள மீன்களை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகில் உட்கார்ந்து கொண்டோம். அவர்கள் மிகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் அந்த மீன்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவை ‘கெளிச்சல்’ என்கிற சிறிய வகை மீன்களாகும். இப்படியான மீன்களை சுத்தப்படுத்துவோருக்கு கூலியாக கிலோ ஒன்றுக்கு 05 ரூபாய் கிடைக்கும் என்றார்கள். அருக்குளா போன்ற பெரிய வகை மீன்களை சுத்தப்படுத்திக் கொடுத்தால், ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் எனும் அடிப்படையில் கூலி கிடைக்கிறது. ‘கடல்கோழி’ எனும் மீனை சுத்தப்படுத்துவதற்குத்தான் அதிக கூலி கிடைக்கிறதாம். அந்த வகை மீனுடைய தோலை உரித்து, வெட்டி சுத்தப்படுத்துவது மிகவும் கடினமாகும் என்கிறார்கள். அதற்கான கூலியாக ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் எனும் அடிப்படையில் கூலி கிடைக்கும் என்று விபரம் தந்தனர் அங்கிருந்த தொழிலாளர்கள்.
உப்புக் கருவாடு உற்பத்திக்கும் சில படிமுறைகள் இருக்கின்றன. மீன் கிடைத்தவுடன் அவற்றினை முதலில் துப்புரவு செய்கிறார்கள். பிறகு அவற்றினை ஒரு நாள் முழுக்க உப்பு நீரில் ஊற விடுகின்றார்கள். பிறகு ஊற வைத்த மீன்களையெல்லாம் சாதாரண நீரில் கழுவுகின்றனர். அதன் பிறகு, அந்த மீன்கள் அனைத்தும் கடற் கரையில் அமைக்கப்பட்ட பரணில் பரப்பப்பட்டு, வெயிலில் காய விடப்படுகின்றன. ஆகக் குறைந்தது மூன்று நாட்கள் இவ்வாறு காய வைக்க வேண்டும் என்கிறார்கள். அதன் பிறகுதான் அவை – கருவாடுகளாக கடைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
அங்குள்ள கடைகளில் ஏராளமான கருவாடுகள் கிடைக்கின்றன. அனைத்தும் உப்புக் கருவாடுகள். சுறா, சூரை, தளப்பத்து, கீரி, சாளை, காரல், நெத்தலி, கட்டா பாரை, கணவா மற்றும் றால் உள்ளிட்ட பல வகையான உப்புக் கருவாடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு வாசம். ஒவ்வொரு விலை.
அங்கிருந்த அன்வரின் கடைக்குள் நுழைந்தோம். அன்வர் சுறுசுறுப்பான ஓர் இளைஞர். சொந்தமாக ஒரு கருவாட்டுக் கடையை நடத்தி வருகிறார். கடைக்குப் பின்னால், கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. அன்வர் அங்கு முதலாளியாகவும் தொழிலாளியாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அன்வரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘எனது கடையிலுள்ள கருவாடுகளில் அருக்குளாவுக்தான் தற்போது அதிக விலையாகும். ஒரு கிலோ அருக்குளா 1300 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. தோளி கருவாடுதான் ஆகக்குறைந்த விலையில் உள்ளது. அது ஒரு கிலோ 100 ரூபாய்தான்’ என்றார் அன்வர்.
அன்வரின் கருவாட்டு உற்பத்தி இடத்தில் சிலர் வேலை செய்கிறார்கள். சாதாரணமாக 40 தொடக்கம் 50 ஆயிரம் ரூபாய்க்கு நாளாந்தம் அவரின் கடையில் வியாபாரமாகிறது. ‘உங்கள் கடையில் அதிகமாக என்ன வகைக் கருவாடு விற்பானையாகிறது’ என்று, அன்வரிடம் கேட்டோம். ‘சிறிய சாளைக் கருவாடுதான் அதிகமாகப் போகிறது’ என்றார். எவ்வளவு காலத்துக்கு இந்தக் கருவாடுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்று அவரிடம் விசாரித்தோம். ’05 மாதம் வரையில் உப்புக் கருவாடுகளை, கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்’ என்று அன்வர் உறுதியாகக் கூறினார்.
ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகளவு கருவாடு விற்பனையாவதாகக் கூறப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் போயா போன்ற விடுமுறை நாட்களிலும் கருவாடு வியாபாரம் சூடு பிடிக்கும் என்கிறார்கள். ஆனால், மழை காலங்களில் வியாபாரம் மந்தமாகி விடும் என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டார், நாம் முதலில் சந்தித்த மஹ்றூப் எனும் கருவாட்டுக் கடை உரிமையாளர்.
கருவாட்டு வியாபாரத்திலுள்ள ரகசியங்கள் குறித்து அறியும் ஆவலோடு மஹ்றூப்பிடம் பேசினோம். ’10 கிலோ மீனுக்கு 03 தொடக்கம் 04 கிலோ கருவாடுதான் கிடைக்கும். அவற்றினை கடையில் வைத்திருக்கும் போது, மேலும் உலர்ந்து எடை குறையும்’ என்றார் மஹ்றூப். நாளொன்று அவரின் கடையில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபா வரையில் வியாபாரமாகிறது என்றார். 02 லட்சம் ரூபாய் பெறுமதியான கருவாடு எப்படியும் 04 நாட்களுக்குள் விற்றுத் தீர்ந்து விடும் என்று மஹ்றூப் கூறினார்.
‘பழுதடைந்த அல்லது பழுதடைந்து விடும் என அச்சப்படக் கூடிய மீன்களைத்தான் கருவாடாக்குகின்றார்கள்’ என்று பரவலாக ஒரு கதை இருக்கிறது. இது குறித்து அங்குள்ள கருவாடு உற்பத்தியாளரான கபீரிடம் கேட்டோம். ‘அப்படியல்ல. நல்ல மீன்களைத்தான் நாங்கள் கருவாடாக்குகின்றோம். ஆனாலும், எப்போதாவது சிலவேளை கொஞ்சம் பழுதடைந்த மீன்களையும் கருவாடாக்க வேண்டியேற்படும்’ என்று அவர் கூறினார். ‘பழுதடைந்த மீன்களை கருவாடாக்குவது பாவமில்லையா’ என்றோம். ‘வேறு மீன்கள் கிடைக்காத போதுதான் அப்படிச் செய்வோம். ஆனால், அந்த மீன்களை நாங்கள் வேண்டாம் என்று கூறி விட்டாலும், வேறொருவர் அவற்றினை வாங்கி, கருவாடாக்கி விடுவார்’ என்று, தமது தொழிலிலுள்ள அந்தரங்கங்களையும் நேர்மையுடன் கபீர் பகிர்ந்து கொண்டார்.
கருவாடுகளை இவர்கள் எங்கும் கொண்டு சென்று, கூவி அழைத்து விற்பனை செய்வதில்லை. தூர இடங்களிலுள்ள வியாபாரிகள், இங்கு வந்து கருவாடுகளை வாங்கிச் செல்கின்றார்கள். இவர்களின் கருவாட்டுக்கு அத்தனை மவுசு. மட்டுமல்லாமல், மற்றைய சில பிரதேசங்களை விடவும், இங்கு கருவாடுகளுக்கு விலையும் சற்று குறைவாக உள்ளது. அங்கேயே மீன்களைப் பிடித்து, அங்கேயே கருவாக்கி, அந்த இடத்திலேயே விற்பனை செய்து கொண்டிருக்கும் அவர்களிடம், ‘இந்த வியாபாரத்தில் நஷ்டமும் உள்ளதா’ என்று கேட்டோம்.
‘மீன்களுக்குத் தட்டுப்பாடான காலத்தில், அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி கருவாடாக்கும் போது, அவற்றினை அதிக விலைக்குத்தான் விற்க வேண்டி வரும். அப்படியானதொரு நிலையில், திடீரென மீன்களுக்கு விலை குறைந்து விட்டால், சந்தையில் கருவாடுகளுக்கும் விலை குறைந்து விடும். அப்போது, அதிக விலை கொடுத்து வாங்கிய மீனில் உற்பத்தி செய்த எங்கள் கருவாடுகளையும், குறைந்த விலையிலேயே நாங்கள் விற்க வேண்டி வரும். இந்த வேளைகளில் நஷ்டத்தை தவிர்க்க முடியாது’ என்று, அங்குள்ள கருவாட்டு வியாபாரிகள் கூறுகின்றனர்.
அந்தப் பகுதியில் 15க்கு குறையாத கருவாட்டுக் கடைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த வீதியால் பயணிப்போரில் கணிசமானோர், தமது வாகனங்களை நிறுத்தி, கருவாடு வாங்கிக் கொண்டுதான் செல்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் அங்கு கருவாட்டு வியாபாரம் களைகட்டுகிறது.
உப்புக் கருவாடுகளில் அருக்குளா, தளப்பத்து மற்றும் கட்டாப்பாரை போன்றவை மிகவும் ருசியானவை. அங்குள்ள கடைகளில் மாசியும் விற்கப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்துக்குச் செல்கின்றவர்கள் சும்மாவேனும் கிண்ணியாவிலுள்ள உப்புக் கருவாட்டுக் கடைப்பக்கமாகச் சென்று பார்க்க வேண்டும். குறிப்பாக, கருவாட்டு உற்பத்தி பிரமிக்கச் செய்யும்.
திருகோணமலையிலிருந்து அம்பாறை நோக்கி நாம் பயணித்தபோதுதான் அந்தக் கருவாட்டுக் கடைகள் நமது கண்ணில் பட்டன. அங்கு நின்று பார்த்தபோதுதான் இந்தக் கட்டுரை கருவானது. வித விதமான கருவாட்டு வாசனைகளை ஒரே இடத்தில் அனுபவிக்க முடிந்தது. அங்கு கருவாடுகளை அவர்கள் அடுக்கியும், பரப்பியும் வைத்திருந்ததைப் பார்க்க, அழகாக இருந்தது.
‘இந்தத் தொழிலில் உங்களுக்குள்ள சவால்கள் என்ன’ என்று நாம் சந்தித்த அவர்களிடம் கேட்டோம். கடுமையாக யோசித்து விட்டுளூ ‘அப்படியொன்றுமில்லை’ என்றார்கள். அலைகளுக்கு எதிராக துடுப்பு வலிக்கும் கடற்றொழிலாளிக்கு இருக்கின்ற தீரமும், நம்பிக்கையும் அந்தப் பதிலில் தெரிந்தன.
வரும்போது மஹ்றூப்பின் கடையில் கொஞ்சம் கருவாடு வாங்கினோம். அதற்கான விலையைச் சொன்னார். ‘கொஞ்சம் குறைக்கக் கூடாதா’. சிரித்துக் கொண்டே ‘பெரிதாக லாபமில்லை பொஸ்’ என்றார். நாங்கள் வெளியேறும் போது, இன்னுமொரு கூட்டம் கடைக்குள் நுழைந்தது.
‘உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு, ஊட்டி விட நீ போதும் எனக்கு. முத்தமிட்டு நெத்தியில, மார்புக்கு மத்தியில செத்து விட தோணுதடி எனக்கு…’
வைரமுத்து அனுபவசாலி.
நன்றி: தமிழ் மிரர் (11 பெப்ரவரி 20117)