கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு
🕔 February 12, 2017


– எம்.ஜே.எம். சஜீத் –
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அமைச்சினுடைய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், தான் நினைப்பது போன்று கன்மூடித்தனமாக செயற்படுவதாகவும், இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவித்தார்.
தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
“கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளார். இவர் தனது சுய விருப்பத்தின்அடிப்படையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதன்காரணமாக தென் கிழக்கு கரையோர பிரதேசங்களில் தனியார் பஸ் சேவைகளில் ஈடுபட்டு வரும் பஸ் உரிமையாளர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இதுவிடயமாக சம்மந்தப்பட்ட தரப்பினர் தீர்வினை வழங்க தவறும் பட்சத்தில் வேலை நிறுத்தத்தில்ஈடுபடவுள்ளோம்.
கடந்த காலங்களில் இலங்கைப் போக்குவரத்து அதிகார சபையினருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்குமிடையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் விடயத்தில் பல்வேறான பிரச்சினைகள் எழுந்தன. இப்பிரச்சினைகளை பல்வேறு தரப்பினருக்கும் அறியப்படுத்தியும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் வாகரை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இவ்விரு சாராரும் ஒன்றிணைந்தசேவையில் ஈடுபடுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைவாக எவ்வித பிரச்சினைகளும் இன்றி பொதுமக்கள் சேவை இடம்பெற்று வந்தது.
இருந்த போதிலும் அண்மையில் கல்முனையில் இருந்து வாகரை ஊடாக திருகோணமலைக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு மேலதிகமாக, சொகுசு பஸ் என்ற போர்வையில் இரண்டு புதிய பஸ் வண்டிகளுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் ஏலவே இவ்வழி ஊடாக சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்கள் பல்வேறான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஏற்கனவே சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில் புதிய பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுவதால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கனவே இப்பாதை ஊடாக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 14 பஸ் வண்டிகளும், தனியார் பஸ்உரிமையாளர்களின் 21 பஸ்வண்டிகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மேலதிகமாக இரண்டு புதிய சொகுசு பஸ்கள் தற்காலிக அனுமதியின் பேரில் சேவையில் ஈடுபட்டுவருவதால் பல்வேறான வீதி விபத்துக்களும் இன்னோரன்ன பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
மேலதிகமாக தனியார் சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதாக இருந்தால் அவற்றை ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்களுக்கு வழங்குவதுதான் நியாயமாகும். அவ்வாறு வழங்கினால், புதிதாக எவ்வித பிரச்சினையும் எழ மாட்டாது. சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தமக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அனுமதியினை வழங்குவது கண்டிக்கத்தக்க விடயம்” என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மௌலானாவும் கருத்துத் தெரிவித்தார்.

Comments

