செயலாளர் நாயகம் பதவி, மு.கா.வுக்குள் இனி இல்லை; தவிசாளர் பதவியை நிராகரித்து விட்டு, அழுதபடி வெளியேறினார் ஹசனலி
– முன்ஸிப் அஹமட் –
முகாங்கிரசின் அதிகாரம் மிக்க செயலாளராக ஹசனலியை மீண்டும் நியமிப்பேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டுமொரு தடவை ஹக்கீம் -துரோகமிழைத்துள்ளார்.
மு.காங்கிரசின் நிருவாகத்தைத் தெரிவு செய்தல் மற்றும் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் பொருட்டு, நேற்று சனிக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், அந்தக் கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் செயலாளர் மற்றும் தவிசாளர் தவிர்ந்த மற்றைய அனைத்துப் பதவிகளுக்கும், அந்தப் பதவிகளை வகித்த நபர்களே மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஹசனலி வகித்து வந்த செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அந்தப் பதவிக்கான அதிகாரங்கள் அனைத்தினையும் வழங்கி, செயலாளர் நாயகமாக ஹசனலியை நியமிப்பேன் என்று, சில மாதங்களுக்கு முன்னர் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
ஆயினும், நேற்றைய கட்டாய உயர்பீடக் கூட்டத்தில், செயலாளராக மன்சூர் ஏ. காதரை ஹக்கீம் நியமித்துள்ளார். முன்பு கட்சிக்குள் செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் என இரு பதவிகள் இருந்த வந்த நிலையில், தற்போது ஹசனலி வகித்து வந்த செயலாளர் நாயகம் பதவி இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்சியின் செயலாளரை தலைவர்தான் நியமிப்பார் என மு.கா. யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் பேசிய ஹசனலி; “அதிகாரம்மிக்க செயலாளர் பதவியை எனக்கு வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அந்தப் பதவிக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொருத்தமான ஒருவரை நியமியுங்கள்” என்று கூறியுள்ளார். ஆயினும், தனக்கு சேவகம் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று ஹக்கீம் அடையாளம் கண்டு வைத்துள்ள மன்சூர் ஏ. காதரையே மீண்டும் செயலாளராக ஹக்கீம் தெரிவு செய்தார்.
இதேவேளை, கட்சியில் பசீர் சேகுதாவூத் வகித்த தவிசாளர் பதவியினை பொறுப்பேற்குமாறு, கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் வைத்து, ஹசனலியை ஹக்கீம் வலியுறுத்திய போதும், ஹசனலி அதனை நிராகரித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய கட்டாய உயர்பீடக் கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் எழுந்த ஹசனலி, தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தினால் மிகவும் மனமுடைந்த நிலையில், அழுதவாறே, தாருஸ்ஸலாமை விட்டும் வெளியேறிச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.