சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி
🕔 February 11, 2017
– சுஐப் எம் காசிம் –
முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர்கள் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், அதனால் சமூக உரிமைகளை மறந்து அவர்கள் வாளாவிருக்கின்றனர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி குற்றஞ்சாட்டினார்.
தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில் இடம்பெற்ற மக்கள் காங்கிரசின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதி அமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார். கட்சியின் தலைவர், அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அமீர் அலி மேலும் தெரிவிக்கையில்;
“சட்டியோடு புலால் நாற்றம் போய்விட்டதென்று ஒரு கிராமத்துப் பழமொழி உண்டு. அதே போன்று முஸ்லிம் காங்கிரசும் மர்ஹூம்அஷ்ரபின் மறைவோடு முடிந்து விட்டது. அந்தக் கட்சிக்குள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகள், பல்வேறு நெருக்கடிகள் தலைவிரித்தாடுகின்றன. தலைவரிலே பிரச்சினை, செயலாளரிலே பிரச்சினை, தவிசாளரிலே பிரச்சினை – அடிதடி நடக்குமளவுக்கு பிரச்சினைகள் பூதாகரமாக கிளம்பியிருக்கின்றன.
சமூகக்கட்சி என்ற நிலையில் இருந்து அந்தக் கட்சி சண்டைக் கட்சியாக மாறிவிட்டது. மர்ஹூம் அஷ்ரபோடு இணைந்து அந்தக் கட்சியை நாங்கள் தூக்கிப்பிடித்தவர்கள். தற்போது சமூகத்தைப் பற்றி சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லாத நிலை வந்துவிட்டது. தாருஸ்ஸலாம் எனப்படும் சுமார் 150 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பிரமாண்டமான கட்டிடத்தின் வாடகையை எடுத்துக் கொண்டு> அவர்களின் ஒருசில முன்னணித் தலைவர்கள் தமது சொந்தப் பெயரில் அதனை எழுதிவிட்டார்கள். இத்தனை பேர் சேர்ந்து வளர்த்தெடுத்த ஒரு கட்சியின் பாரிய சொத்தினை முஸ்லிம் காங்கிரசின் ஒருசிலருக்கு இனாமாகக் கொடுத்துவிட்டு விழி பிதுங்கி நிற்கும் மடைமையுள்ளவர்களாக இருக்கின்றோம்.
இன்று முஸ்லிம் சமூகம் எண்ணற்ற சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. மத்ரஸாக்களிலும் பள்ளிவாயல்களிலும் எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அது போல காணிப்பிரச்சினை, வில்பத்துப் பிரச்சினை, தீகவாபி பிரச்சினை, மேய்ச்சல் தரைப் பிரச்சினை என்று எண்ணற்றப் பிரச்சினைகள். இவற்றப்பற்றி அவர்கள் பேசுவதாக இல்லை. கட்சியென்பது கிப்லா அல்ல; குர்ஆனுமல்ல, மார்க்கமுமல்ல. அது ஓர் இயக்கம், நமக்கு தேவையான விடயத்தை பெற்றுத் தருகின்ற ஒரு சங்கம். அந்த சங்கத்திலே நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். அந்த இயக்கம் நமக்கான வேலைத்திட்டத்தை எங்களுக்கு செய்து தராவிட்டால், அதிலிருக்கும் தலைவரை நீங்கள் நம்பக்கூடாது. அதனை விட்டு வேறு சங்கத்துக்கு செல்ல வேண்டும். மக்கள் காங்கிரசுக்கும் இது பொருத்தமானதே.
முஸ்லிம்களின் நலன்காக்கும் சங்கமெனக் கருதப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், கடந்த காலங்களில் நமது பிரச்சினைகளை தீர்க்கத் தவறிவிட்டது. அவர்கள் அந்தப்பிரச்சினைகளை தீர்க்க தயாராகவுமில்லை. அவர்களுடைய கவனமும், கரிசனையும், தங்களை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றது. “நாரே தக்பீர்” என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், பின்னர் “ஆதவன் எழுந்து வரப் போகின்றான்” என்று கூறியபோது அவர்களை நம்பினோம். ஏமாந்தோம்.
இந்த நிலவரத்தை மாற்றுவதற்காகவே நாங்கள் மக்கள் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினோம். எமது தலைமை நீங்கள் எதிர்பார்ப்பதைவிட ஒருபடி மேலே சென்று ஓடோடி வருகின்றது. உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு முண்டியடித்துச் செல்கின்றது. தம்புள்ளைப் பிரச்சினை தொடக்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு எமது தலைமையே முன்னின்று செயற்படுகின்றது. சகோதர இனங்கள் கூட இதனை ஏற்றுக் கொள்கின்றனர். சமுதாயத்துக்கு பாடுபடுவதற்காக இந்தத் தலைமையை கொள்ளி கொத்துகிறார்கள். முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க பாடுபடுவதற்காகவும், துரத்தப்பட்ட மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்க போராடுவதனாலேயுமே இந்தத் தலைமைக்கு இத்தனை நெருக்கடிகள். பெரும்பான்மை சமூகத்திலுள்ள இனவாதிகள் இந்த றிஷாட் பதியுதீனை இனவாதியாக இதனால்தான் சித்தரிக்க முனைகிறார்கள்.
தீகவாபி விவகாரத்தில் இனவாதிகள் மர்ஹூம் அஷ்ரபை குற்றஞ்சாட்டிய போது, அவர் எவ்வாறு பதில் கொடுத்தாரோ அதேபோன்று வில்பத்து விவகாரத்தில் இனவாதிகள் முஸ்லிம்களுக்கு பிரச்சினை கொடுத்த போது, அதே பாணியில் பதிலடி கொடுத்தவர்தான் அமைச்சர் றிஷாட் பதியுதீன். இவ்வாறுதான் நாங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக திடகாத்திரமாக செயற்பட்டு வருகின்றோம். புடவைச்கட்டு பொட்டணி வியாபாரிகள் அந்த நாட்களிலே எங்கள் பிரதேசத்திற்கு வந்து வியாபாரம் செய்தது போல, தேர்தல் காலங்களில் “ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்தான்” என்ற பாடலுடன் எங்களிடம் வந்தபோது, சாரிசாரியாக வாக்களித்தோமே. நமக்கு என்னதான் இவர்களால் பயன் கிடைத்தது?
இந்தக் காலகட்டத்திலே இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் நீங்கள் அப்துல்லாஹ் மஹ்ரூப் போன்ற கோலோச்சிய தலைவர்களுடன் இணைந்து எமது கட்சியையும், எமது தலைமையையும் பலப்படுத்த வேண்டும். நாங்கள் தன்மானத்துடனும், கௌரவத்துடனும் வளமாக வாழ்வதற்கு இந்தத் தலைமைக்கு நீங்கள் வலுச்சேர்க்க வேண்டும். அதன் மூலமே உங்களின் குறைகளை இலகுவில் நிவர்த்திக்க முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.