முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும்
உட்கட்சி பிரச்சினைகளைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தருணமொன்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பேராளர் மாநாட்டை நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது.
மு.காங்கிரசின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிருவாகப் பதவிக்குரியவர்களைத் தெரிவு செய்து, அதற்கான அங்கீகாரத்தினை பேராளர் மாநாட்டில்தான் பெறவேண்டும்.
இன்று சனிக்கிழமை, மு.கா.வின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் மு.கா.வின் நிருவாகத் தெரிவும், கட்சியின் யாப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அது தொடர்பான தீர்மானங்களும் எட்டப்படும்.
முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம்தான், அந்தக் கட்சியின் உச்ச சபையாகும். கட்சியின் எல்லாவிதமான முடிவுகளும் உயர்பீடத்தின் அனுமதியுடன்தான் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்று, கட்சியின் யாப்பு கூறுகிறது.
ஆனாலும், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இதனைக் கணக்கில் எடுக்காமல், சர்வாதிகாரத்துடன் – கட்சி தொடர்பான பல முடிவுகளை தனித்து எடுத்துள்ளமை குறித்து, ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் மொத்தமாக 90 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 56 பேரை, மு.கா. தலைவர் நேரடியாக நியமிக்க முடியும். கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பதவி வழியாக உயர்பீட உறுப்பினர்களாக உள்வாங்கப்படுவார்கள். கட்சி சார்பான உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களும் பதவி வழியாக உயர்பீட உறுப்பினர்கள் எனும் அந்தஷ்தினைப் பெற்றுக்கொள்வார்கள்.
மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீக்கும், அதன் தவிசாளராகவிருந்த பசீர் சேகுதாவூத்துக்கும் இடையில் இருந்து வந்த புகைச்சல் தீயாக மாறி, இப்போது எரிமலைகளாக வெடித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னொருபுறும் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலியும், கட்சித் தலைவருடன் முரண்பட்ட நிலையிலேயே உள்ளார். ஆயினும், பசீர் சேகுதாவூத் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஹசனலி இன்னும் கட்சிக்குள்ளே இருக்கின்றார்.
மு.காங்கிரஸ் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் மீது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றார்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய பசீர் சேகுதாவூத், மு.கா. தலைவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவையாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போதைய வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக பசீர் சேகுதாவூத் அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அவ்வாறு பெற்றுக்கொண்ட பணத்தில் அப்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், தனக்கும் ஒரு கோடி ரூபாய் கிடைத்ததாகவும் பசீர் கூறினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டினை இதுவரை மு.கா. தலைமை உத்தியோகபூர்வமாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மு.கா. தலைவர் மற்றும் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டதாகவும், அவற்றினை நிரூபிக்கக் கூடிய வீடியோக்கள் தன்வசம் உள்ளதாகவும் பசீர் சேகுதாவூத் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பசீர் கூறிய இந்த தகவல்கள் கட்சிக்குள்ளும், வெளியிலும் பல்வேறு விதமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
இவற்றுக்கு அப்பால், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்எம். சல்மான் ஆகியோர், அந்தக் கட்சியையும், கட்சியின் தலைமையகக் கட்டிடத்தையும் தம்வசப்படுத்திக் கொண்டு, மோசடியாக சொத்துக்களையும் நிதியினையும் சம்பாதித்து வருவதாகக் குற்றம் சுமத்தும் புத்தகமொன்றும் அண்மையில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. ‘தாருஸ்லலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்பது, அந்தப் புத்தகத்தின் பெயராகும். மேற்படி புத்தகத்தை பசீர் சேகுதாவூத்தான் வெளியிட்டுள்ளார் என்று, ரஊப் ஹக்கீம் தரப்பு குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறான நிலையில், மு.கா.வின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத்தை இடைநிறுத்துவதாக, அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
பசீர் சேகுதாவூத்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தவிசாளர் பதவியிலிருந்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. தவிசாளரை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே, கட்சியின் புதிய நிருவாகம் தெரிவு செய்யப்படவுள்ளதோடு, அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்குரிய பேராளர் மாநாடும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒழுக்காற்று நடவடிக்கையின் பொருட்டு, கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பசீரை இடைநிறுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவில்லை.
மேலும், ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெறாமல், அதற்குரிய தீர்ப்பு வழங்கப்படாமல், கட்சிக்கான புதிய நிருவாகமொன்றினை தெரிவு செய்யும் செயற்பாடானது, எவ்வளவு தூரம் சட்ட ரீதியானதாக அமையும் என்கிற கேள்விகள் உள்ளன.
தன்னை இடைநிறுத்தியுள்ள சந்தர்ப்பமொன்றில் மு.கா. நடத்தும் கட்டாய உயர்பீடக் கூட்டம் மற்றும் பேராளர் மாநாடு ஆகியவற்றினை செல்லுபடியற்றவை என உத்தரவிடக் கோரி, பசீர் சேகுதாவூத் தரப்பு நீதிமன்றம் சென்றால் என்ன நடக்கும் என்கிற கேள்வியும் கட்சிக்குள் உள்ளது.
மு.கா.வின் தலைவராக இம்முறை ரஊப் ஹக்கீம்தான் பிரேரிக்கப்படுவார். கடந்த காலங்களில், மு.கா. தலைவராக ரஊப் ஹக்கீம் பிரேரிக்கப்பட்ட வேளைகளில் ஏகமனதாக உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் அதனை ஆமோதித்திருந்தனர்.
ஆனால், இம்முறை தலைவர் பதவிக்கு ஹக்கீமுடைய பெயர் பிரேரிக்கப்படும் போது, வேறு சிலருடைய பெயர்களையும் பிரேரிப்பதற்கானதொரு பேச்சுவார்த்தை கட்சிக்குள் ரகசியமாக முன்னெடுக்கப்பட்டது.
ஆனாலும், பசீர் சேகுதாவூத் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தற்போதைய நிலையில், ஹக்கீமுக்கு எதிராக வேறொருவரின் பெயரை தலைமைப் பதவிக்குப் பிரேரிக்கும் செயற்பாடு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்னொருபுறம், ஹக்கீமை எதிர்த்து தலைமைப் பதவிக்கு யாராவது போட்டியிட்டாலும் கூட, இப்போதைய நிலையில் அவர்களால் வெற்றி பெறவும் முடியாது. மு.காங்கிரசின் உயர்பீடத்தில் ஹக்கீமுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது.
இந்த ஆதரவினை ஹக்கீம் பல்வேறு வழிகளில் திட்டமிட்டு உருவாக்கி வைத்துள்ளார். உயர்பீட உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியும், நிதியுதவிகளை பெற்றுக் கொடுத்தும் வேறு பல வரப்பிரசாதங்களை வழங்கியும் உயர்பீட உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவினை ரஊப் ஹக்கீம் பெற்றெடுத்துள்ளார் என்று, நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது.
இதேவேளை, மு.கா.வின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை வழங்கியுள்ளார்.
அதேவேளை, கட்சியின் அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினையும் ஹசனலிக்கு வழங்குவதாக ஹக்கீம் வாக்குறுதியளித்துள்ளார் எனவும், ஹசனலி தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான நிலையில், பேராளர் மாநாட்டில் வைத்து அல்லது அதன் பின்னர் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக ரஊப் ஹக்கீம் உத்தியோகபூர்வ அறிவிப்புச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரம்மிக்க செயலாளர் பதவியினை ஹசனலிக்கு ஹக்கீம் வழங்குவதற்கான சாத்தியங்கள் இப்போதைக்கு இல்லை.
அவ்வாறு, ஹசனலிக்கு அதிகாரம்மிக்க செயலாளர் பதவியோ அல்லது அதற்கு நிகரான பதவியோ கட்சிக்குள் வழங்கப்படவில்லை என்றால், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ஹசனலி ஏற்றுக் கொள்வாரா என்கிற சந்தேகங்களும் உள்ளன.
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள கட்டாய உயர்பீடக் கூட்டத்தின்போது இடம்பெறும் நிருவாகத் தெரிவில், தமக்கு பதவிகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் உள்ளனர். இவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லையாயின், ஹக்கீம் மீது இவர்கள் அதிருப்தி கொள்ளும் நிலை ஏற்படும். இந்த அதிருப்திகள் சிலவேளை பசீருக்கு சாதகமாக அமையவும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
எது எவ்வாறிருந்தபோதும் மு.காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள கலவரங்களால், அந்தக் கட்சியின் மதிப்பும், கட்சிக்கான ஆதரவும் மக்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் தீவிரம் பெறுவதற்கான அறிகுறிகள்தான் அநேகமாகத் தெரிகின்றன.
ஹக்கீமுக்கும் பசீருக்கும் இடையிலான போர் இன்னும் தீவிரமடைந்தால், கட்சிக்குள் இன்னும் பிளவுகள் ஏற்படும். ஹக்கீமுக்கு எதிரான அணிக்கு பலம் அதிகரிக்கும். இவ்வாறானதொரு நிலைவரம் உருவாகுவது ஹக்கீமுக்கு நல்லதல்ல.
முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் காங்கிரசுக்குள், இப்போது ஏற்பட்டுள்ள உட் குழப்பங்களால், கட்சி சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் அரசியல் கட்சி எனும் அடையாளத்தைப் பெற்றுள்ள மு.காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைகள் ஆரோக்கியமானவையல்ல. ஆனால், கட்சிக்குள் தலைவர் ஒரு சர்வதிகாரிபோல் செயற்படுவதும் கட்சிக்கு ஆரோக்கியமாக அமையாது.
முஸ்லிம் காங்கிரசுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடியாக ஒரு முடிவு காணப்படாது விட்டால், எதிர்வரும் தேர்தல்களில் அதன் விளைவினை அந்தக் கட்சி அறுவடை செய்துகொள்ளும்.
நன்றி: ஆதவன்