நாட்டை நேசிப்பது இஸ்லாமியக் கடமை: கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி உதவிச் செயலாளர் சஹீட்
🕔 February 4, 2017
– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் –
இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு அடுத்த படியாக, தமது நாட்டை நேசிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும் என்று, கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி நிருவாகத்தின் உதவிச் செயலாளரும், முன்னாள் அதிபருமான அல்ஹாஜ் யூ.எம். சஹீட் தெரிவித்தார்.
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வு, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி அதிபர் எம்.எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கல்லூரியின் நிருவாகத்தினர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி நிருவாகத்தின் உதவிச் செயலாளரும், முன்னாள் அதிபருமான அல்ஹாஜ் யூ.எம். சஹீட், ‘இஸ்ஸாத்தில் நாட்டுப்பற்று’ எனும் தொனிப் பொருளில் சிறப்புரையாற்றினார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்;
“ஈமான் எனப்படுகின்ற இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு அடுத்த படியாக, தமது நாட்டை நேசிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும்.
இலங்கையர்களாகிய நாம், எமது நாட்டினுடைய சட்ட திட்டங்களையும், அரசினுடைய செயற்பாடுகளையும் அங்கீகரித்து, அவற்றின் மூலம் – நாட்டின் புகழை, உலகறியச் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது’ என்றார்.
இந் நிகழ்வின் இறுதியில், நாட்டினதும் – நாட்டு மக்களினதும் நலன்களுக்காக விசேட பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.