அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணக்கு அழைப்பு

🕔 February 2, 2017

Addalaichenai NC - 011– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர்

ட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பதற்கான தகுகளைக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவரை, அந்தப் பாடசாலையில் சேர்த்துக் கொள்ள முடியாது என அதிபர் தெரிவித்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில், விசாரணைக்கு வருமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை மனித உரிமை ஆணைக்குழு அழைத்துள்ளது.

ஆங்கில மொழி மூலம் கல்வியினைத் தொடர்வதற்காக விண்ணப்பித்த 92 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் 87 புள்ளிகளைப் பெற்று 09 ஆவது நிலையினைப் பெற்ற சம்பந்தப்பட்ட மாணவனுக்கு அனுமதியினை மறுத்துள்ள அதிபர், அதே பரீட்சையில் 74 புள்ளிகளைப் பெற்று 37ஆவது நிலையினை அடைந்த மாணவனுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பிரதேசத்தில் இரண்டு மொழி மூலம் கற்பித்தல் செயற்பாடு நடைபெறுகின்ற ஒரேயொரு பாடசாலை இதுவாகும். 06ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரையில், ஆங்கில மொழி மூலம் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கற்பித்தல் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், இந்த வருடம் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆங்கிலம் மூலம் கற்பதற்கான அனுமதிக்காக 92 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆயினும் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்வதற்கான வளப்பற்றாக்குறை பாடசாலையில் நிலவுகின்றமையினால், அவர்களில் ஒரு தொகையினரை மாத்திரம் சேர்த்துக் கொள்வது என பாடசாலை நிருவாகம் தீர்மானித்தது. இதற்கமைவாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 09ஆம் திகதி தகுதிகாண் பரீட்சையொன்று நடத்தப்பட்டது.

இந்தப் பரீட்சையில் எம்.எஸ். நதீஸ் அஹமட் எனும் மாணவன் 87 புள்ளிகளைப் பெற்று 09ஆவது நிலையினை அடைந்தார். ஆயினும், குறித்த மாணவனுக்கு அனுமதி வழங்காமல், அந்த மாணவரின் இடத்துக்கு 74 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஒரு மாணவரை சேர்க்குமாறு, தரம் 06 மற்றும் 07 வகுப்புகளைக் கொண்ட வலயத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.ஐ. இக்பால் என்பவரை அதிபர் பணித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிபரின் உத்தரவுக்கமைவாக நடந்துகொண்ட குறித்த ஆசிரியர் எம்.ஐ. இக்பால், தன்னை நியாமில்லாமலும் மனச்சாட்சிக்கு விரோதமாகவும் நடந்துகொள்வதற்கு அதிபர் வற்புறுத்தியதாகத் தெரிவித்து, வலயத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதாகத் தெரிவிக்கின்றார்.

இதனையடுத்து மாணவனின் தகப்பன் மற்றும் உறவினர்கள் பாடசாலை அதிபரிடம் சென்று, தமது பிள்ளையை சேர்க்க முடியாமைக்கான காரணத்தைக் கேட்டபோது, உண்மைக்குப் புறம்பானதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமான காரணங்களை அதிபர் தெரிவித்ததாக மாணவனின் தந்தை கூறுகின்றார்.

இதன் பின்னர் மாணவனின் தந்தை, தனது மகனுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் தொடர்பில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் எழுத்து மூலம் முறையிட்டதோடு, தனது பிள்ளைக்கு நியாயம் பெற்றுத் தருமாறும் கோரியுள்ளார். ஆயினும், எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அக்கரைப்பற்று காரியாலத்தில் மாணவனின் தந்தை எழுத்து மூலம் முறைப்பாடொன்றினைக் கையளித்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அக்கரைப்பற்று காரியாலய அதிகாரிகள், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரைச் சந்தித்து, குறித்த மாணவனுக்கு அனுமதி வழங்குமாறு கோரிய போதும், அதற்கும் அதிபர் மறுப்புத் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக் காரியாலயத்தில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மாணவனின் தந்தை இதுகுறித்து முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை இந்த செய்தி தொடர்பில் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகச் சந்தித்தோம். இதன்போது, குறித்த மாணவனை அனுமதிப்பது தொடர்பில் தமது தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளமையினை ஏற்றுக்கொண்ட அதிபர், 87 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட எம்.எஸ். நதீஸ் அஹமட் எனும் மாணவரை தமது பாடசாலையில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்பதற்கு அனுமதிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாளை வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையொன்றுக்கு வருகை தருமாறு மாணவனின் தந்தை மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக் காரியாலயம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்