தொழிலாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருப்பது தொடர்பில், சஊதி அரேபியாவில் புதிய சட்டம்
– அன்சார் (சம்மாந்துறை) –
சஊதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களின் கடவுச்சீட்டை, தொழில் கொள்வோர் குறித்த பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அந்த நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வாறு ஒப்படைக்காத தொழில் நிறுவனங்கள் மன்றும் தொழில் கொள்வோர் 2000 றியால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பணியாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருக்கும் தொழில் கொள்வோர், உடனடியாக அவற்றை தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தண்டப் பணம் இரட்டிப்பாக செலுத்த நேரிடும் எனவும் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
தொழிலாளர்களின் சம்மதத்தோடு அவர்கள் எழுத்து மூலம் அனுமதியளித்தால் மாத்திரம், அவர்களின் கடவுச் சீட்டினை தொழில் கொள்வோர் வைத்திருக்க முடியும் எனவும் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.