அதிபரின் களவை காட்டிக் கொடுத்த ஆசிரியைக்கு அவமானம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

🕔 January 26, 2017
Muslim Teacher - 011– பாறுக் ஷிஹான் –

கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் முஸ்லிம் ஆசிரியை ஒருவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை புதன்கிழமையன்று, கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசியை மேற்கொண்டார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில்;

‘கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் என்ற வகையில் தங்களுக்கு மிக மன வேதனையுடன் இவ்விடயத்தை அறியத் தருகிறேன்.

என்னை ஒரு ஆசிரியர் என்று கூடப் பார்க்காமல், அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் பாடசாலைக்குள் வர வேண்டாம் எனக் கூறி, சம்பளப் படிவத்தினை வெளியில் அனுப்பி என்னிடம் கையொப்பம் பெற்றார்.

எமது பாடசாலையில் சென்ற எட்டாம் மாதம் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உணவைச் சூறையாடி, 425 கிலோ அரிசியினை வீட்டுக்குக் கொண்டு செல்ல எத்தனித்த வேளையில், நான் உலக உணவுச் சபைக்கு அறிவித்து அவர்கள் வந்து 425 கிலோ அரிசி மற்றும் வேறு பொருட்களைக் கண்டெடுத்தனர்.

சுகுணா, முத்துக்குமார், சிவராசா என்பவர்களைக் கேட்டால் அது தெரியும்.

அன்று ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, இன்று சோனிக்கு வகுப்பில்லை என வெளியில் விட்டு அவமானப்படுத்தினார். ஒவ்வொரு மாதமும் ஏதோவொரு நிகழ்வை கருத்தில் வைத்து எமது சம்பளத்தில் பணம் வெட்டி எடுக்கிறார்.

அதற்குக் கணக்குக் காட்டுவதில்லை. ஆசிரியர்களின் பணத்தினை அவர்களுக்குக் கணக்குக் காட்டுவது அவசியமாகும்.

நிறைய அவமானங்கள் நடைபெறுகின்றது. பாடசாலை நேரங்களில் ஜீவநாயகம் அதிபரையும், சில ஆசிரியர்களையும் குழப்புகின்றார்.

நான் தற்போது இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டி. என்னை உலகமே பார்க்க அவமானப்படுத்தச் செய்த அதிபரை தயவு செய்து விசாரித்து ஆசிரியர்களான எங்களை நிம்மதியாகக் கற்பித்து, சிறந்த சமூகத்தை உருவாக்க வழி செய்யுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எனது மகன் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கின்றார். மற்றவர்கள் 03 வயத்துக்குட்பட்டவர்கள். எனக்கு யாருமில்லாத காரணத்தினால் எனது கணவர் அவரது வேலையை விட்டு என்னைக் கெளரவப்படுத்தும் நோக்கோடு, என் பிள்ளைகளை அவரே எனது கடமை நேரத்தில் பார்க்கின்றார்.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்துமிருப்பின் எனது குடும்ப நிலையும், மன நிலையும் பாதிப்படையும்.

ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன், என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்