மகளுக்கு மனநிலை சரியில்லை, பிணை வழங்குங்கள்: விமலின் கோரிக்கையை, நிராகரித்தது நீதிமன்றம்

🕔 January 24, 2017

Wimal - 08976தேசிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை தொடர்ந்தும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

விமல் வீரவன்ச சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவினை நிராகரித்த நீதவான், இந்த உத்தரவினை வழங்கினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்தபோது, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது நீதிபதி தெரிவிக்கையில்; விமல் வீரவன்சவினுடைய உறவினர்களுக்கும், கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் மேற்படி வாகனங்கள் வழங்கப்பட்டமை வெளிப்படையாகத் தெரிகின்றது என்றார். அதேவேளை, குறித்த வாகனங்கள் வழங்கப்பட்ட எவரும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்கள் இல்லை எனவும் நீதவான் தெரிவித்தார்.

தனது மகளின் உளநிலை கருதி, தனக்கு பிணை வழங்குமாறு, தன்னுடைய பிணை மனுவில் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழில், உரிய வைத்தியர்களின் கையொப்பம் இல்லை என்றும், எனவே இது தொடர்பில் கவனம் செலுத்த முடியாது எனவும் நீதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்