புதிய வகைத் தேயிலை, ஜனாதிபதியால் அறிமுகம்
🕔 January 21, 2017
– க. கிஷாந்தன் –
புதிய ரக தேயிலையொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று சனிக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலையே, ஜனாதிபதியினால் அறிமுகம் செய்யப்பட்டது.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து, இந்த அறிமுக விழா இடம்பெற்றது.
இதன்போது, குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150 வது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92 வது ஆண்டு விழாவை முன்னிட்டே இவ்விழா நடத்தப்பட்டது.
தேயிலை பயிர்செய்கையின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு, தேயிலைத்துறை தொடர்பில், புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் 92 வருட வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும், ஜனாதிபதியொருவர் இங்கு வருகை தந்தமை, இதுவே முதன் முறையாகும்.
இந்நிகழ்வின் போது அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, பழனி திகாம்பரம் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.