வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு

🕔 January 20, 2017

Corn - 02– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர்)

நாட்டில் நிலவி வரும் வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சோளப் பயிர்ச் செய்கையாளர்கள் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்போக மழை கிடைக்காமை காரணமாக, தமது சோளப் பயிர்களில் கணிசமானவை கருகிப் போயுள்ளதாகவும், சோளக்கதிர்கள் முழுமையாக முதிர்ச்சியடையாமை காரணமாகவும், விவசாயிகள் இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹிறா நகர், ஆலிம்சேனை மற்றும் பள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் சோளம் உள்ளிட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழையை மட்டும் நம்பி இங்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமையினால், மாரிப் போகத்தில் மட்டுமே சோளம் பயிரிடப்படுகிறது.

அந்த வகையில், கடந்த செப்படம்பர் மாதத்தில் சோளச் செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்தும், மழை இல்லாமை காரணமாக, ஒக்டோபர் மற்றும் நொவம்பர் மாதங்களிலேயே சோளம் பயிரிடப்பட்டது.

எவ்வாறாயினும், பெரும் போகத்தில் கிடைக்க வேண்டியளவு மழை கிடைக்காமை காரணமாக, பயிரின் வளர்சியும் – கதிர்களின் முதிர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்டவாறு அமையவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சோளம் விதைக்கப்பட்டு 75 தொடக்கம் 80 நாட்களில் அறுவடை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனாலும், மழையின்மை காரணமாக, அதிகளவு பயிர்கள் வாடியும், கருகியும் போயுள்ளதோடு, கதிர்களும் போதியளவு முதிர்ச்சியடையாமல் போயுள்ளன. இதனால், அறுவடையினை மேற்கொள்ள முடியாத நிலைவரமும் சில விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைவரம் காரணமாக, தமது முதலீட்டில் அரைவாசியினைக் கூட, பெற்றுக் கொள்ள முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர்.

சாதாரணமாக, ஒரு ஏக்கர் சோளப் பயிர்ச் செய்கைக்காக சுமார் 40 ஆயிரம் ரூபாவினை செலவிட வேண்டியேற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிறப்பான விளைச்சல் கிடைக்குமாயின் ஏக்கரொன்றுக்கு 35 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையினை லாபமாகப் பெற முடியும் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனாலும், தற்போது மழை கிடைக்காமை காரணமாக, தமது சோளச் செய்கையில் விவசாயிகள் நஷ்டத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, விவசாயிகளுக்கு உர மானியம் கிடைக்காமையினால், தமக்குத் தேவையான உரத்தினை முழுத் தொகைப் பணத்துக்கே கொள்வனவு செய்திருந்தனர். இதன் காரணமாக, விவசாயிகள் எதிர்கொள்ளும் நஷ்டம் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வரட்சியினால் பாதிக்கப்படும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு, நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Corn - 10 Corn - 08 Corn - 11 Corn - 07

Comments

புதிது பேஸ்புக் பக்கம்