குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

🕔 July 7, 2015

Hakeem - 981
கொ
ழும்பிலும், சுற்றுப் புறங்களிலுமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கூழன்களை, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிப்பதனால், உருவாகியுள்ள சூழல் பிரச்சினைகளுக்கு – துரிதமாக உரிய தீர்வுகளைக் காணுமாறு, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம், தமது அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், குப்பைகளைக் கொட்டுமிடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலையைப் பொறுத்து, மாற்று இடங்களில் வசிப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது பற்றியும் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர் ஹக்கீம் தமது அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில், நேற்று திங்கட்கிழமை – அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலொன்றின் போதே, அமைச்சர் ஹக்கீம் இவ் விடயங்களைத் தெரிவித்தார்.

மீதொட்டமுல்லப் பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுமிடம் மலைக்குன்று போல உயர்ந்து காணப்படுவதால், கழிவுகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள், ஏறிச் செல்ல முடியாமல் பழுதடைந்து விடுவதால், தொடர்ந்தும் அங்கு குப்பைகளைக் கொண்டு சென்று கொட்டுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு குப்பைகள் நாளாந்தம் குவியும் விவகாரம் பாரிய பிரச்சினையாக உருவாகியிருப்பதால,; இதற்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ஹக்கீம், சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கைகளை இயன்றவரை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளைப் பணித்தார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை கூழன்களும், ஏனைய கழிவுப் பொருட்களும் குவிவதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கின்ற குறைந்த வருமானமீட்டும் குடும்பங்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும், அவர்களின் உடல் நலனுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, உடனடியாக இன்றைய தினமே அங்கு சென்று நிலைமையை அவதானித்து, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் – அதிகாரிகளை அவர் பணித்தார். குப்பை கொண்டு செல்லும் பழுதடைந்த வாகனங்களை திருத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வழிவகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடி மேற்கொள்ளுமாறும் அமைச்சர் கூறினார்.

இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ. சுரேஸ், உபாய நகர அபிவிருத்தி செயல்திட்டப் பணிப்பாளர் அனுர தசநாயக்க உட்பட நகர அபிவிருத்திகார சபை, காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் பங்குபற்றினர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்