மனக் கணக்கு

🕔 January 8, 2017

article-nifras-098– ஏ.எல்.நிப்றாஸ் –

தொண்ணூறுகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலொன்றில் ‘குறிப்பிட்ட ஓரிரு உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை என்றால், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமாச் செய்வதாக’ அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அறிவித்திருந்தார். துரதிர்ஷவசமாக அவ்வாறு நிகழ்ந்து விட்டது. உடனே அஷ்ரஃப். தனது எம்.பி. பதவியை ராஜினாமாச் செய்தார். ‘இது சிறிய விடயம்தானே இதற்காக ஏன் பதவி விலக வேண்டும்?’ என்று அவரிடம் கேட்கப்பட்ட போது,’மு.கா. என்பது பெருந்தேசிய கட்சியல்ல. இது குர்ஆனையும் ஹதீஸையும் யாப்பாக கொண்ட கட்சி. இக்கட்சியின் தலைவன் கொடுத்த வாக்குறுதியை மீற முடியாது’ என்று கூறினார்.

இது ஒரு சம்பவம் மட்டுமே. ஒரு முஸ்லிம் கட்சியின் தலைமைத்துவம் அல்லது குர்ஆனையும் ஹதீஸையும் வழிகாட்டியாக கொண்டு செயற்படும் அரசியல் இயக்கத்தின் தலைமை, தனது வாக்குறுதியை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்ற படிப்பினையை பெற்றுக் கொள்வதற்கு இந்த ஒரு சம்பவம் மட்டுமே போதுமானது. ஆனால் எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் இப்பண்பை முழுமையாக கடைப்பிடிப்பதற்கான சான்றுகள் இல்லை. குறிப்பாக அஷ்ரஃபின் இடத்தில் வைத்து பார்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், அபிவிருத்தி அரசியலிலும் உரிமைசார் அரசியலிலும் கட்சியை ஜொலிக்கச் செய்யவில்லை என்ற விமர்சனங்களுக்கு புறம்பாக,குறைந்தபட்சம் – கொடுத்த வாக்கை காப்பாற்றுவதிலாவது அஷ்ரஃபை பின்பற்றவில்லை என்ற அங்கலாய்ப்பு மிக முக்கியமானது.

இதனைக் கருத்திற்கொண்டு, தேசியப்பட்டியல் எம்.பி. தொடர்பாக ,தான் வழங்கிய ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் முடிவுக்கு மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் இப்போது வந்திருக்கின்றார். அதன்படி அதிகாரம் குறைக்கப்பட்ட செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி நாளை திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹசனலிக்கு கொடுத்த வாக்குறுதியை, தலைவர் ஹக்கீம் நிறைவேற்ற முற்படுகின்ற சமகாலத்தில், அதுபோலவே அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத ஒரு சிக்கல்நிலையை அவர் எதிர்கொண்டிருக்கின்றார். அதன்படி பொருளியலின் அமையச் செலவுக் கோட்பாடும், நியூட்டனின் இரண்டாம் விதியும் வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றன.

பிழைத்துப்போன உத்திகள்

உண்மையில் தேசியப்பட்டியலுக்காக உத்தேச உறுப்பினர்களை பெயரிடுகின்ற போதே,யாரை அல்லது எந்த ஊரைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டுமோ அவர்களையே முன்மொழிந்திருக்க வேண்டும். அதைவிடுத்துவிட்டு, தனது சகோதரரையும் நண்பரையும் தேசியப்பட்டியலுக்காக முன்மொழிந்தது மட்டுமன்றி அவர்களை பல மாதங்களாக அப்பதவிக்கு நியமித்தது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நடவடிக்கையாகும். மட்டுமன்றி, செயலாளர் அதிகார குறைப்பு மேற்கொண்டது, பிழைத்துப் போன இன்னுமொரு உத்தியுமாகும்.

இந்நிலையில் இப்போது இதில் ஒரு தேசியப்பட்டியல் எம்.பி.யை ஹசனலிக்கு கைமாற்றுவதாகவும், அடுத்த பேராளர் மாநாட்டின் ஊடாக அவருக்கு அதிகார அளிப்பு மேற்கொள்வதாகவும் ஹக்கீம் வாக்குறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் இடைக்கால இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கியமாக, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்கள் தமக்கு தேசியப்பட்டியல் எம்.பி. ஒன்றை இப்போதே தந்துவிட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில், தேசியப்பட்டியல் எம்.பி.யாக வருவதற்கு ஹசன்அலி விரும்பியிருக்கவில்லை. கடந்த தேர்தலில் போட்டியிடவே ஆசைப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த தலைவர் ஹக்கீமே தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக வாக்குறுதி அளித்தார். இவ்விடயத்தை ஒரு வருடத்திற்குப் பிறகு ஹக்கீம் இப்போது பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார். செயலாளர் அதிகாரம் தொடர்பில் தனது கைக்கு கிடைத்த துருப்புச் சீட்டை மிகவும் ராஜதந்திரமாக பாவித்து, ஹக்கீமை அந்தளவுக்கு இறங்கிவரச் செய்திருக்கின்றார் ஹசனலி. அதன்பலனாக அவருக்கு எம்.பி.பதவி கிடைக்கப் போகின்றது எனலாம்.

இதேவேளை அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக நெடுங்காலமாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால், அம் மக்கள் மிகவும் லாவகமான முறையில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். உண்மையிலேயே அட்டாளைச்சேனைக்கு அல்லது வன்னிக்கு எம்.பி. வழங்க வேண்டுமென்ற எண்ணம் இருக்குமென்றால், உத்தேச பெயர்ப்பட்டியலில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த இருவரின் பெயர்களை மு.கா. தலைவர் முன்னமே உள்ளடக்கியிருக்க வேண்டும். அதேபோன்று அப் பட்டியலில் தமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் உள்ளடங்குவதை சம்பந்தப்பட்ட ஊர்களின் உள்ளுர் அரசியல்வாதிகளும் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

பொறுமையின் எல்லை

ஹபீஸூம் சல்மானும் எம்.பி.க்களாக பதவி வகித்த போது, ஹபீஸ் எம்.பி. தனது பதவியை ராஜினாமாச் செய்து அவ்விடத்திற்கு திருமலை எம்.எஸ். தௌபீக் எம்.பி.யாக பதவியேற்ற போது முன்வைக்கப்படாத விமர்சனங்கள், இப்போது சல்மானின் இடத்திற்கு ஹசனலியை நியமிப்பதற்கு கட்சித் தலைவர் முடிவெடுத்த பிறகு முன்வைக்கப்படுகின்றன. இதில் தவறும் இல்லை. எது எவ்வாறிருப்பினும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு எம்.பி. வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிலுள்ள நியாயத்தையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை நடந்துவிட்ட பிறகும் பெரிய கொந்தளிப்புக்களை வெளிப்படுத்தாது அம்மக்கள் இருப்பதை குறைத்து மதிப்பிடவும் கூடாது.

இங்கு ஒருவிடயத்தை கவனிக்க வேண்டும். இவ்வாறு எம்.பி.க்காக பொறுத்திருந்த ஊர்கள், அழுத்தம் கொடுக்கும் நேரம் என்பது தலைவரின் நிலையில் இருந்து பார்த்தால் ஒரு பொருத்தமற்ற சந்தர்ப்பமாக தெரியலாம். ஹக்கீமும் ஹசன்அலியும் சமரசமாகிப் போகாவிட்டால் கட்சியின் செயற்பாடுகளுக்கு என்ன நடக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு சொல்லியுள்ளது. அத்துடன், அரசாங்கத்துடன் ஹக்கீம் தரப்பை இழுத்துக் கொண்டுபோய் சேர்த்த ஹசனலியை இனியும் எம்.பி.யாக நியமிக்காமல் விடுவதற்கு, ஐ.தே.க.விடாது என்றும் கூறப்படுகின்றது. எனவே, இப்போது அட்டாளைச்சேனைக்கோ வன்னிக்கோ வழங்குவதை விட ஹசனலிக்கு வழங்குவதே சாணக்கியமானதாக அமையும் என்று தலைவர் ஹக்கீம் கருதுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற மு.கா.வின் உயர்பீடக் கூட்டத்தில் இவ்விடயம் கடுமையாக சூடுபிடித்திருந்தது. கூட்டத்தின் ஆரம்பத்திலேயே ‘நான் ஹசனலிக்கு முன்னமே எம்.பி.தருவதாக வாக்குறுதியளித்துவிட்டேன். அதன்படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை அவருக்கு வழங்க தீர்மானித்திருக்கின்றேன்’ என்று கூறிய தலைவர் ஹவூப் ஹக்கீம், உயர்பீட உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிப்பதற்கு இடமளித்தார். இங்கு கருத்து வெளியிட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தின் உறுப்பினர்கள் தமது ஊருக்கு எம்.பி. வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த கட்சித்தலைவர்,அட்டாளைச்சேனைக்கு எப்போது வழங்குவேன் என்றோ அல்லது வழங்கமாட்டேன் என்றோ கூறவில்லை. மாறாக,’தரமாட்டேன் என்று சொல்லவில்லையே’ என்ற வார்த்தையையே அவர் உயர்ந்பட்சமாக பயன்படுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் தெரிவித்தார்.

சந்தேகமான பேச்சு

இந்தக் கூட்டத்தில் தலைவர் மேற்கண்டவாறு அறிவித்த போதும், நிசாம் காரியப்பரின் கருத்து சற்று வேறு கோணத்தில் இருந்ததாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார். ‘ஹசனலியின் நடவடிக்கையால் தேர்தல் ஆணையாளரூடாக ஏற்பட்ட சட்டச் சிக்கலுக்கு நாம் தீர்வு கண்டிருக்க முடியும். நாம் இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் பேசினோம். அவர்களின் உதவியுடன் வெற்றிபெற்றிருக்க முடியும். ஆனாலும் அவருக்கு அப்பதவியை வழங்க தலைமை முடிவு செய்துள்ளது’ என்ற அர்தத்தத்தில் நிசாம் காரியப்பர் பேசியதாக கூறப்படுகின்றது.

இங்கு அட்டாளைச்சேனை மட்டுமன்றி, வன்னி, கம்பஹா, குருணாகல் மற்றும் கொழும்பு மாவட்டங்களின் உயர்பீட உறுப்பினர்களும் இந்த தேசியப்பட்டியலை தமக்கு வழங்க வேண்டுமென தலைவரை கோரி நின்றனர். அப்படியாயின், ஏகப்பட்ட ஊர்களும் தனியாட்களும் இந்த எம்.பி.க்காக அப்பச்சண்டை பிடித்துக் கொண்டிருக்க, ஹசனலியால் ஏற்படக் கூடிய சட்ட ரீதியான சவாலை சமாளிக்க முடியும் என்ற நிலையும் காணப்படும் போது, ஏன் இவ்வளவு சிக்கலுக்கும் நடுவில் ஹசனலிக்கு எம்.பி. கொடுக்கும் தீர்மானத்தை தலைவர் ஹக்கீம் எடுத்திருக்கின்றார் என்ற சிந்தனை உருவாகின்றது.

உண்மையாகவே, அவ்வாறு சட்ட ரீதியாக செயலாளர் நாயகத்தை எதிர்கொள்ள முடியுமென்றால் அதுவே ஹக்கீமின் முதற் தெரிவாக இருந்திருக்கும் என்பது வேறு கதை. ஆனால், இவ்வளவு பிரச்சினைக்கும் நடுவில் ஹசனலிக்கு எம்.பி.யை கொடுப்பது, வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி, கட்சியின் செயற்பாட்டை காப்பாற்றுவது மட்டுந்தானா? அல்லது மறைமுக காரணங்கள் ஏதேனும் இதில் இருக்கின்றதா என்ற நியாயமான சந்தேகங்கள் எழவே செய்கின்றன. அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

அதாவது, மேற்படி உயர்பீடக்கூட்டத்தில், பேசிய கட்சித்தலைவர் ஹக்கீம்,’தேசியப்பட்டியல் எம்.பி.யை நியமிக்கும் தார்மீக அதிகாரம் தலைவருக்கு இருக்கின்றது. ஆனால், செயலாளர் பதவி குறித்த தீர்மானத்தை கட்சியின் பேராளர்களே எடுப்பார்கள். இதை நாம் ஹசனலிக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்’ என்று சற்று அழுத்தமாக கூறியதாக சொல்லப்படுகின்றது. அது உண்மையென்றால், அவ்விடத்தில் மேற்சொன்ன சந்தேகம் மேலும் வலுக்கின்றது. ஏதோ ஒரு அடிப்படையில் ஹசனலிக்கு பதிலடி கொடுக்கும் நோக்கிலேயே இத்தனை எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் தலைவர் இப்படியான ஒரு நகர்வை மேற்கொள்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

என்ன நடக்கலாம்

மு.கா.வின் அடுத்த பேராளர் மாநாடு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முதல்நாள் இரவு கட்டாய உயர்பீடக் கூட்டம் இடம்பெறும். ஹசனலியின் அதிகாரங்களை மீள வழங்குவது உள்ளடங்கலாக கட்சியின் யாப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப் பின்னணியில் நோக்கும்போது, செயலாளர் நாயகத்துக்கு போதுமான அதிகாரத்தை வழங்காமல் விடுவதற்கு, அல்லது வேறு ஏதேனும் வழியில், ஹசனலி நினைத்த அதிகாரத்தை வழங்காமல், எம்.பி. பதவியுடனேயே அவரை வைத்திருப்பதற்கு ஹக்கீம் மனக் கணக்கு போகின்றாரோ என்று உயர்பீட உறுப்பினர்கள் சிலர் நினைக்கின்றனர்.

ஹசனலிக்கு எம்.பி.யை கொடுத்தால் அவரை பதவியாசை பிடித்தவராக சித்தரிக்கலாம். மக்கள் மனங்களில் அவர் பற்றிய தப்பபிப்பிராயத்தை உருவாக்கலாம். அவ்வாறான ஒரு சூழலில் தேர்தல் ஒன்றின் மூலமாக இல்லை என்றாலும், மக்கள் மனங்களில் இருந்து ஹசனலியை தோற்கடித்து, நிரந்தரமாக கட்சியில் ஒருபுறமாக ஒதுக்கிவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சில முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அப்படி ஏதாவது மறைமுக மனக்கணக்குகள் இருந்தால், இப்போது போர்க்கொடி தூக்குகின்றவர்களுக்கு தலைவர் அதனை சொல்லாமல் சொல்லியிருக்கவும் கூடும்.

எனவே, செயலாளர் நாயகம் ஹசனலி தனக்கு கிடைக்கவிருக்கும் பதவியை வேறு பிரதேசங்களுக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்போது பதவிப் பிரமாணம் செய்து கொள்வது உசிதமானதல்ல என்று மு.கா.வின் மூத்த உறுப்பினர்கள் கருதுகின்றனர். தனக்கு செயலாளர் பதவிக்கான அதிகாரமே முதலில் வேண்டுமென்று கோரி வந்த ஹசனலி, அவ் அதிகாரம் அடுத்த பேராளர் மாநாட்டின் ஊடாக கிடைக்கும் என்பது நிச்சயமில்லாத ஒரு சூழலில் இப்போது சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளக் கூடாது. தலைவர் வாக்குறுதி அளித்தபடி, ஜனநாயக முறைப்படி அதிகாரங்கள் மீளக் கிடைத்தபின் எம்.பி. பதவியை பொறுப்பேற்றால் இந்த பனிப்போரில் அவர் வெற்றிபெறுவார் என்பது வேறு சிலரின் நிலைப்பாடாக இருக்கின்றது.

ஆனால், இவ்வாறான சுத்துமாத்து வேலைகள் ஏதாவது இடம்பெறலாம் என்பதை ஹசனலி அறியாத ஒருவரும் அல்லர். தான் கட்சியில் நெருக்கமாக இருக்கும்போதே அதிகாரத்தை குறைத்தவர்கள், இத்தனை பிரளயங்களுக்குப் பிறகு எதையும் செய்யக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவருக்கு இருக்கவே செய்யும். எனவே, ஹக்கீம் எந்தக் கோணத்தில் காய்களை நகர்த்தினாலும் அவருக்கு எதிராக களமாடுவதற்கு ஹசனலி தயராகவே இருப்பார். தலைவரின் போக்குகள் மாறுபடுமாயின், தான் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு மனக்கணக்கு ஹசனலிக்கும் இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாக கூற முடியும்.

தலைவரும் செயலாளர் நாயகமும் மட்டுமன்றி கட்சியில் உள்ள அனைவருமே இதய சுத்தியுடன் ஒன்றுசேர வேண்டும் என்பதும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது உள்வீட்டுச் சண்டைகளில் காலத்தைக் கழிக்காமல், மக்கள்மய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுமே மக்களின் எதிர்பார்ப்பாகும். மக்களின் எதிர்பார்ப்புக்களை புறக்கணித்து தங்களது சொந்த ஈகோ மற்றும் கௌரவத்தை தக்க வைப்பதற்காக போடப்படும் எல்லா மனக்கணக்குகளும் எதிர்பார்த்த பெறுபேகளை ஒருக்காலும் பெற்றுத்தராது.

ஏனென்றால், காலத்தின் கணக்கு அப்பேர்ப்பட்டது.

நன்றி: விரகேசரி வாரவெளியீடு (08.01.2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்