முகம்மட் சியாம் கொலை வழக்கு சிறைக் கைதி, பட்டம் பெறுகிறார்: இலங்கையில் வரலாற்றுச் சாதனை
வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனைக் கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கலைமானிப் பட்டம் பெறவுள்ளார்.
பிரபல வர்த்தகர் பம்பலப்பிட்டி முகம்மட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் லக்மினி இந்திக பமுனுசிங்க என்பவரே இன்று பட்டம் பெறுகிறார்.
இலங்கையில் சிறைக் கைதி ஒருவர் இவ்வாறு பட்டம் பெறுகின்றமை, இதுவே முதல் தடவை என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேற்படி நபர் குறித்த வழக்கில் கைது செய்யப்படும் போது, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டப் படிப்பினை வெளிவாரியாக கற்றுக் கொண்டிருந்தார்.
சிறைச்சாலை ஆணையாளரின் விசேட அனுமதியின் பிரகாரம், குறித்த சிறைக்கைதி, இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
லக்மினி இந்திக பமுனுசிங்க எனும் மேற்படி மரண தண்டனைக் கைதி, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.