பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

🕔 January 4, 2017

Jaward - 011– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்ததாக, சில இணையத்தளங்களில் வெளியாகியிருக்கும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை மக்களிடம் தன்னைப் பற்றி பிழையான கருத்து ஒன்றினை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள, கேவலமானதொரு நடவடிக்கையாகவே, அந்த இணையத்தள செய்தியினை – தான் பார்ப்பதாகவும் மாகாணசபை உறுப்பினர் ஜவார் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

அட்டாளைச்சேனப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க வேண்டும் என்பதில் – எனக்கு மாற்றுக் கருத்துக்கள் எவையுமில்லை. அதை நீண்ட காலமாக வலியுறுத்தியும் வருகின்றேன்.  அதேவேளை, கடந்த உயர்பீடக் கூட்டத்திலும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கியே ஆக வேண்டும் என்று கூறினேன்.

மேலும், அட்டாளைச்சேனையில் – ஊரையும் கட்சியையும் கட்டி ஆளுகின்ற ஒருவருக்கே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க வேண்டும் என்றும், உயர்பீடக் கூட்டத்தில் வலியுறுத்திறுத்தினேன்.

இந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்றும் நான் கூறினேன். காரணம், கட்சித் தலைவருடன் ஹசனலிக்கு ஏற்பட்ட முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் பொருட்டு, நாம் அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். அப்போது அவர் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டார். தனது செயலாளர் பதவினை முழு அதிகாரங்களுடன் மீளவும் வழங்க வேண்டும் என்றார். மேலும், தலைவர் ஹக்கீம் தன்னை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியதோடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவேன் என்று உறுதியளித்திருந்ததாகவும் சொன்னார்.

இதற்கமைய ஹசனலிக்கு அதிகாரம் மிக்க பொதுச் செயலாளர் பதவியினை உடனடியாக வழங்க வேண்டும். அல்லது அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குதல் அவசியமாகும். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவைதான் வழிகளாகும். அந்தவகையில் பார்த்தால், ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதைத் தடுக்கும் முயற்சியானது, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கைகளுக்கு தடையாக அமையும் என்பதை நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

மேலும். ஹசனலிக்கு தேசியப்பட்டில் வழங்குவதாக – தேர்தல் காலத்திலேயே தலைவர் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதை கடந்த உயர்பீடக் கூட்டத்தல் தலைவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது மு.காங்கிரசின் கைவசம் இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவை இரண்டும் மொத்தமாக 08 வருட பதவிக் காலங்களைக் கொண்டவையாகும். எனவே, இந்த எட்டு வருடங்களையும் பிரித்து, தேசியப்பட்டியல் வழங்குவதாக வாக்குறுதியளித்த பிரதேசங்களுக்கு சுழற்றி முறையின் அடிப்படையில் வழங்குவதாகவும், எந்த ஊருக்கு எந்தக் காலப் பகுதியில் வழங்கப்படும் என்றும் அறிவித்து விட்டால், தேசியப்பட்டியல் என்கிற பிரச்சினையே கட்சிக்குள் இருக்காது என்பதையும் கடந்த உயர்பீடக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தேன்.

இப்படியான நிலையில்தான், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுப்பதற்கு ஜவாத் எதிர்ப்பு என்று, பொய்யான செய்தி பரப்பப்படுகிறது.

மாகாணசபை உறுப்பினர் தவம் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இவ்வாறானதொரு பொய்யான செய்தி வெளிவந்திருப்பதாகக் கூறிய பிறகுதான், அந்தச் செய்தி பற்றி நான் அறிந்தேன். உயர்பீடத்தில் நீங்கள் கூறாத விடயங்களை அந்தச் செய்தியில் எழுதியிருக்கிறார்கள் என்று தவம் என்னிடம் கவலைப்பட்டார்.

அட்டாளைச்சேனையிலுள்ள மக்கள் என்னுடன் அன்பானவர்கள், எல்லாத் தேர்தல்களிலும் எனக்கு வாக்களிப்பவர்கள், குடும்ப உறவிலும் அட்டாளைச்சேனையுடன் எனக்கு தொடர்பு உள்ளது. மட்டுமன்றி அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்பதற்கு, மறுக்க முடியாத நியாயங்களும் இருக்கின்றன.

இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நான் பேசியதாக வெளிவந்துள்ள செய்தியினை முற்றாக மறுக்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்