வில்பத்து பிரகடனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: றிப்கான் பதியுதீன் கோரிக்கை

🕔 December 31, 2016

rifkaan-011– சுஐப் எம் காசிம் –

வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது, 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியென வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எனவே, தனது அறிவிப்பினை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டுமெனவும அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முசலிப் பிரதேச முஸ்லிம்களை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்காக இனவாதிகள் தொடர்ந்து சதி முற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இன்னுமொரு அங்கமாகவே, அவர்கள் அந்தப் பிரதேசத்தின் உண்மை நிலையை திரிபுபடுத்தி போலியான ஒலி நாடாக்களையும் பிழையான தகவல்களையும் உருவாக்கியுள்ளனர். இவற்றினைப் பெற்றுக்கொண்டு, ஜனாதிபதி அவசர அவசரமாக மேற்கொண்ட மேற்படி முடிவானது நல்லாட்சியின் மீதான முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை பாழ்படுத்தியுள்ளதென றிப்கான் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;

முசலிப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேற முனைந்ததிலிருந்து இனவாதத்தின் ஊற்றுக்களான ஞானசார தேரர், ஆனந்த தேரர் ஆகியோர் – அந்த முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போதும் அதே முயற்சிகளையே மேற்கொள்கின்றனர்.

பாலைக்குழி, கரடிக்குழி, காயாக்குழி, மறிச்சிக்கட்டி போன்ற தமது பூர்வீகக்காணிகளில் உள்ள காடுகளை, அகதி முஸ்லிம்கள் துப்புரவாக்கி கொட்டில்களை அமைத்த போது, ஞானசார தேரர் தலைமையிலான  இனவாதக்கூட்டம் அங்கு சென்று காட்டுத்தர்பார்களில் ஈடுபட்டு கொட்டில்களை பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்தனர். இனவாத தனியார் ஊடகங்கள் ஹெலிக்கொப்டர்கள் மூலம் அங்கு சென்று, நவீன இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தி வில்பத்துக்காடுகளை அழிப்பது போன்ற படங்களை எடுத்து அதனை தமது ஊடகங்களில் பரப்புரை செய்தனர். இதன் மூலம் முஸ்லிம்கள் தொடர்பான சிங்கள மக்களின் மனங்களில் பிழையான கருத்தை ஏற்படுத்தி அவர்களைத் தூண்டி விடுவதே இனவாதிகளினதும் இனவாத ஊடகங்களினதும் நோக்கமாக அப்போது இருந்தது.

இந்த மக்களுக்கு எதிராகவும் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராகவும் இனவாதச் சூழலியலாளர்கள் பல வழக்குகளை பதிந்தனர். இது தொடர்பில் இடம்பெறும் வழக்குகளிலே சட்டமா அதிபரின் அறிக்கையில் கூட வில்பத்து அழிக்கப்படவில்லை என்றே நீதிமன்றத்துக்கு அத்தாட்சி வழங்கப்பட்டுள்ளது. இனவாதிகளின் குற்றச்சாட்டுக்கள் பிழையானதென்றும் வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறவேயில்லை எனவும்  மன்னார் அரச அதிபரும் முசலி பிரதேச செயலாளரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இத்தனைக்கும் மேலாக தனியார் இலத்திரனியல் தொலைக்காட்சி ஒன்றில் ஆனந்த தேரருக்கும் அமைச்சர் றிசாட்டுக்கும் இடையே இடம் பெற்ற நேரடி விவாதம் ஒன்றில், வில்பத்துவை முஸ்லிம்கள் அழிக்கவில்லையெனவும் இதனை நிருபிக்குமாறும் அமைச்சர் றிசாட் சவால் விடுத்திருந்தார். இந்த விவாதத்தில் ஆனந்த தேரர் சரியான கருத்துக்களை முன்வைக்காமல மழுப்பி, மூக்குடைபட்டு சென்றமையை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் முஸ்லிம்கள் வில்பத்துவில் குடியேறவில்லை எனவும் அங்கு எத்தகைய காடழிப்போ ஆக்கிரமிப்போ இடம்பெறவில்லையெனவும் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தனர்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதிகளின் பிழையான தகவல்களைப் பெற்று இவ்வாறான நடவடிக்கைகளை இப்போது மேற்கொள்வது, நல்லாட்சி மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை இழக்க வைக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு முஸ்லிம்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கிளர்ந்து ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ள ஆற்றிய பங்களிப்பை எவரும் இலகுவில்  மறந்துவிடக் கூடாது – மறந்து விடவும் முடியாது. முஸ்லிம்களுக்கெதிரான இனவாதிகளின் செயற்பாட்டை மஹிந்த கட்டுப்படுத்தாதன் விளைவையே அவர் இப்போது அனுபவிக்கிறார். அவ்வாறான ஒரு நிலைக்கு இந்த நல்லாட்சியும் தள்ளப்பட்டு விடக்கூடாது.

முன்னர் ஒரு தடவை யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி, வில்பத்துவுக்கு மேலாக தாம் விமானத்தில் பயணம் செய்த போது காடழிப்பு இடம்பெற்றதை அவதானித்ததாக கூறினார். அப்போதும் நாங்கள் இந்தக்கூற்றைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். இப்போது மீண்டும் இனவாதிகளின் பொய்க் கதைகளைக் கேட்டுவிட்டு, திடீரென இவ்வாறான அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.

நாட்டுத்தலைவரின் இந்த அறிவிப்பு வடக்கு முஸ்லிம்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. எனவே இந்த அறிவிப்பை ரத்துச் செய்ய வேண்டும்” என்றார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்