அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம்
🕔 December 31, 2016
– முன்ஸிப் அஹமட், படங்கள்: எம்.ஏ. றமீஸ் –
மு.காங்கிரஸ் தலைவவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்குவதற்கு மறுத்தால், மு.காங்கிரசில் தாம் வகிக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்வதென, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 06 பேர் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் வாக்களித்தவாறு இதுவரை வழங்காமல், ஏமாற்றி வருகின்றமையினை அடுத்து, இவ்விவகாரம் தொடர்பில் தீர்க்கமானதொரு முடிவினை எடுக்கும் நோக்குடன், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். அனீஸ் தலைமையில் இன்று சனிக்கிழமை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலில் கூட்டமொன்று இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மு.காங்கிரசின் உயர்பீடத்தில் உறுப்பினர்களாகப் பதவி வகிப்பவர்களும், ஊரின் முக்கியஸ்தர்கள் மற்றும் மு.காங்கிரசின் தீவிர தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதென மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்களித்திருந்தபோதும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. எனவே, எதிர்வரும் 02ஆம் திகதி கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ள உயர்பீடக் கூட்டத்தில், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியலை வழங்குமாறு மு.கா. தலைவரைக் கோருவதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது, மு.கா. தலைவர் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு சம்மதிக்கவில்லையாயின், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மு.காங்கிரசின் உயர்பீடத்தில் உறுப்பினர்களாகவுள்ள 06 பேரும், தமது உயர்பீட உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்வதென தீர்மானித்துள்ளனர்.
மேலும், இதன் பின்னர் ஊரின் முக்கியஸ்தர்களை பள்ளிவாசலுக்கு அழைத்து, முக்கியமான தீர்மானமொன்றினை மேற்கொள்வது என்றும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மு.கா.வின் உயர்பீட உறுப்பினர்களான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த யூ.எல். வாஹிட், சட்டத்தரணி எஸ்.எம்.எம்.ஏ. கபூர், எஸ்.எல்.எம். பளீல், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், பாலமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மற்றும் ஒலுவிலைச் சேர்ந்த ஏ.எல். நபீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த பொதுத் தேர்தல் பிரசார மேடைகளில் வைத்து, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் உறுதியளித்திருந்தார்.
எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்ட மு.கா. தலைவர்; அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க முடியாது என்பதை – மிகவும் பகிரங்கமாகவும், தெளிவாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.