புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத்
– சுஐப் எம் காசிம் –
அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமாகவோ, சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அரசியல் அதிகாரம் என்பது, இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடை எனவும் அவர் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசில், பிரபல தொழிலதிபர் ஜிப்ரியை இணைக்கும் நிகழ்வும், மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் புத்தளம் கடற்கரைப் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யஹ்யா ஆப்தீன், முன்னாள் பிரதேச உறுப்பினர் முஹ்சி ரஹ்மதுல்லாஹ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், சமூக சேவையாளர்களான இல்ஹாம் மரைக்கார் மற்றும் இப்லால் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் இங்கு மேலும் கூறுகையில்;
“அரசியல் அதிகாரம் ஜனநாயக வழியில் பெறப்பட வேண்டியதாகும். அடித்து நொறுக்கி அபாண்டங்களைக் கூறி பழிகளைச் சுமத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாமென நினைப்பது மடைமைத்தனமாகும்.
கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக புத்தளம் தொகுதி அரசியல் அதிகாரத்தை இழந்து நிற்கின்றது. இதனால் இங்குள்ள மக்கள் தவிக்கின்றனர். பிரிவும் பிளவும் ஒற்றுமையீனமுமே இந்கப் பிரதிநிதித்துவத்தை நாம் இழந்து நிற்பதற்கு பிரதான காரணமாகும்.
புத்தளத்தின் அரசியல் அதிகாரம் அற்றுப்போனதால் நாம் கையறு நிலையில் இருக்கின்றோம். இந்த மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் நடப்பதற்குப் பதிலாக இங்குள்ள மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் செயற்திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன.
இருக்கும் கட்டடங்களும் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையையே காண்கின்றோம். ஏற்கனவே அனல் மின்நிலயத்தின் தாக்கத்தினால் பல்வேறு பாதிப்புக்களை அனுபவித்து வரும் எங்கள் மீது, இப்போது குப்பைகளையும் கொட்டத் துடிக்கின்றார்கள். கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்ட எடுக்கும் அவசரமான முயற்சிகளுக்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை.
நாடாளுமன்றத்திலும் உயர் மட்டத்திலும் இது தொடர்பில் எமது தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளோம். மேற் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுத்தால் அதனை தீவிரமாக தடுத்து நிறுத்துவோம். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அமைச்சரவையின் ஓர் அங்கமாக இருந்து கொண்டு அரசின் தீர்மானங்களை எதிர்ப்பதென்பது எல்லோருக்கும் முடியாததாகும். எனினும் எம்மைப் பொறுத்தவரையில் குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டுவர வேண்டாமென நேர்மையாகவும், துணிவாகவும், காட்டமாகவும் கூறியிருக்கின்றோம். அதையும் மீறினால் இந்த விடயத்தை வித்தியாசமாக அணுகுவோம்.
இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு புத்தளம் தொகுதி ஒரு முன்மாதிரியாக விளங்கி வருகின்றது. உலகின் எந்த மூலையிலும் முஸ்லிம்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டாலும் முதலில் புத்தளம் வாழ் முஸ்லிம்களே முன்னின்று குரல் கொடுக்கின்றனர். பாலஸ்தீனத்தில் அட்டூழியங்கள் இடம்பெற்ற போதும், சதாம் ஹுசைனுக்கு மேற்குலகம் கொடுமைகளைச் செய்த போதும், காஸாவில் மோசமாக தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் இங்கு வாழும் முஸ்லிம்கள் துணிந்துநின்று குரல் கொடுக்கின்றனர்.
இத்தனைக்கும் மேலாக ஒரு லட்சம் முஸ்லிம்களை புலிகள் விரட்டியடித்த போது, எந்தவிதமான சலிப்புக்களுமில்லாமல் அவர்களை அரவணைத்து, உணவளித்து, உடுதுணிகள் வழங்கி இருக்க இடம் வழங்கியவர்கள் புத்தளம் வாழ் முஸ்லிம்கள்தான். இவ்வாறான பரோபகாரிகளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நமது ஒற்றுமையீனத்தால் சிதறடிக்கப்பட்ட புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை இனியும் கோட்டை விடக் கூடாது என்பதில் மக்கள் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எந்தக் கட்சியையும் அழிக்க வேண்டுமென்றோ, அடுத்தவரின் காலைத் தட்டிவீழ்த்திவிட்டு அவர்களின் ஆசனத்தில் அமர வேண்டுமென்ற எந்தத் தேவைப்பாடோ எங்களுக்கில்லை. புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை புத்தளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவரே அலங்கரிக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். அதற்காக மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளுக்கும் நாமும் கைகொடுத்து உதவுவோம். எங்களிடம் வெறுமனே அரசியல் பித்தலாட்டங்கள் கிடையாது.
அதிகாரமென்பது ஆபத்தானது, அது பயங்கரமானதும் கூட. எனவே அதனை மிகவும் சரியான முறையில் கையாள வேண்டும். அதிகாரங்களை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. மக்களுக்கு பணியாற்றும் அரசியல்வாதிகளுக்கே அபாண்டங்களையும் பழிகளையும் சுமத்துவார்கள். இதுவே யதார்த்தம். இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு குறுகிய காலத்தில் வளச்சி பெற்றிருக்கின்றதென நீங்கள் உணர்வீர்களேயானால், அதற்கு காரணம் நாங்கள் சமூகத்திற்கு பணியாற்றியிருக்கின்றோம் என்பதே அர்த்தமாகும்.
இந்தக்கட்சியின் தேவைப்பாட்டை இறைவன் அங்கீகரித்தனாலேயே நாங்கள் வளர்ச்சி கண்டுள்ளோம். மர்ஹும் அஷ்ரப் ஆரம்பித்த கட்சி – அவரின் மறைவுக்குப் பின்னர் மேற் கொள்ளும் செயற்பாடுகளையும், அவருடைய எண்ணங்களை நிறைவேற்றுவதில் காட்டுகின்ற ஆர்வம் என்ன என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டுவிடுகின்றேன்” என்றார்.