தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம்
🕔 December 29, 2016
– எம்.வை. அமீர் –
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடமானது 2017 ஆம் ஆண்டில் முதுமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை ஆரம்பிக்க முடியும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
அவ்வாறான பட்டப்படிப்புகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை, சம்பந்தப்பட்ட பீடம் தயாரித்து வழங்கினால், அதற்குரிய முழு ஒத்துழைப்புக்களையும் தான் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு, பிரயோக விஞ்ஞானபீட கேட்போர் கூடத்தில், பீடாதிபதி கலாநிதி யு.எல்.செயினூடீன் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பிரயோக விஞ்ஞான பீடத்தினால் 05 வது தடவையாக இவ் ஆய்வரங்கு நடத்தப்படுகின்றது.
இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.
இதன்போது உப வேந்தர் நாஜிம் மேலும் கூறுகையில்;
“இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு ஆய்வரங்குகளில் பன்குகொண்டுள்ளேன். இந்த ஆய்வரங்கு முடிந்த கையோடு கலை மற்றும் கலாச்சார பீடத்தின் ஆய்வரங்கு ஒன்றுக்குச் செல்லவுள்ளேன். அதிகரித்துள்ள இவ்வாறான ஆய்வரங்குகள் , ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளின் காரணமாக, தேசத்தின் முன்னேற்றத்தில் இப்பல்கலைக்கழகமும் மிகுந்த கரிசனையுடையதாக இருக்கின்றமையை எடுத்துக்காட்டுகிறது.
கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது, ஆய்வுகள் விடயத்தில் முன்னிலை வகிப்பதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் உதவுகிறது.
பிரயோக விஞ்ஞான பீடதிபதி கலாநிதி யு.எல்.செயினூடீன் விடுத்துள்ள ஆய்வுமையம் தொடர்பான கோரிக்கையை உடனடியாக செயட்படுத்தமுடியும். இவ்வாறான ஆய்வரங்குகளுடன் மட்டும் நின்றுவிடாது, பிரயோக விஞ்ஞான பீடமானது 2017 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி தொடர்பான பட்டப்படிப்புகளை ஆரம்பிக்க வேண்டும். அதாவது முதுமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை ஆரம்பிக்கமுடியும். அதற்கான வேலைத்திட்டங்களை தயாரித்து வழங்கினால், நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். அத்துடன் பிரயோக விஞ்ஞான பீடத்தினூடாக டிப்ளோமா மற்றும் சான்றிதழ் பாடநெறிகளையும் ஆரம்பிக்க முடியும்” என்றார்.
மேற்படி ஆய்வரங்கின் பிரதம பேச்சாளராக, கொலம்பிய பல்கலைக்கழக காலநிலைகள் தொடர்பான விஞ்ஞானி கலாநிதி லரீப் சுபைர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்குக்கு, 36 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
நிகழ்வில் கலாநிதி அபூபக்கர் ஜெளபர் வரவேற்புரையையும், நிகழ்வின் செயலாளரான வி.சுஜாராணி நன்றியுரையும் நிகழ்த்தினார்கள்.