தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு

🕔 December 27, 2016

article-mtm-8765– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியலின் அகராதி விசித்திரமானது. பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறிப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விபரிக்கிறது. சாதாரண குடிமகனின் வலிகளுக்கும், கண்ணீருக்கும் அரசியல் அகராதியில் அர்த்தங்கள் எவையுமில்லை.

பொதுத் தேர்தல் நடந்து 16 மாதங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, யாரை நியமிப்பது என்கிற விவகாரத்துக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. அந்தக் கட்சிக்குள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பலரும் கோரி நின்றமையினால்தான் இப்படியொறு நிலை ஏற்பட்டதாக, கட்சித் தலைமை காரணம் சொல்கிறது. அதேவேளை, வெட்டொன்று துண்டிரண்டு பாணியில் இந்த விவகாரத்துக்கு ஆரம்பத்திலேயே முடிவு கட்டப்பட்டிருந்தால், இற்றை வரை பிரச்சினை நீண்டிருக்காது என்று கூறுவோரும் உள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது மு.கா.வின் தேசியப்பட்டியல் விவகாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மு.கா.வுக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியலில் ஒன்றினை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக் பெற்றெடுத்து விட்டார். மற்றையது எம்.எச்.எம். சல்மானிடமிருந்து மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு வழங்கப்படவுள்ளது. அரச தொலைக்காட்சியின் நேரடி அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இதை சாடைமாடையாக உறுதிப்படுத்தியும் விட்டார். அப்படியென்றால், மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் குறிவைத்து இடம்பெற்று வந்த கூத்துக்கள், இனி நிறைவுக்கு வந்;துவிட வேண்டுமல்லவா. ஆனால், அது நிகழவில்லை. தேசியப்பட்டிலுக்கான கோரிக்கைகளும் கோசங்களும் இன்றும் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன.

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசம், தேசியப்பட்டியலை இன்னும் விடாப்பிடியாகக் கோரிக் கொண்டே இருக்கிறது. அப்படியானதொரு நிலைப்பாட்டில் அந்த ஊர் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரசுக்கு அதிகபட்ச ஆதரவினை வழங்கும் பிரதேசங்களில் அட்டாளைச்சேனையும் ஒன்றாகும். இந்தப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவேன் என்று, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல் காலங்களில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். குறிப்பாக, 2010ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மசூர் சின்னலெப்பைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக மு.கா. தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்டதோடு, அவரின் பெயரும் தேசியப்பட்டியல் வேட்பாளர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆனால், கடைசிவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இப்போது மசூர் சின்னலெப்பையும் உயிருடன் இல்லை. அவர் மரணித்து நான்கு வருடங்கள் கடந்து விட்டன. இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான பிரசார மேடைகளிலும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக மு.கா. தலைவர் வாக்குறுதியளித்தார். அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதி கூறினார். ஆனால், இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ‘தற்காலிகமாக’ வைத்திருப்பதாகக் கூறப்படும் எம்.எச்.எம். சல்மானிடமிருந்து, அந்தப் பதவியைக் கழற்றி எடுத்து, தலைவர் தமக்குத் தருவார் என்கிற எதிர்பார்ப்பொன்று அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு கடைசிவரை இருந்தது. ஆனால், இப்போது சல்மானிடமிருந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி – ஹசனலிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ வழங்க முடியாது என்பதை, மு.கா. தலைவர் மிக வெளிப்படையாகவே கூறிவிட்டார். கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அவர்; கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்சியில் வைத்து இதனைத் தெரிவித்தார்.

‘சில மாவட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் இல்லாமல் உள்ளன. சில மாவட்டங்களில் நிறைய ஆசனங்கள் குவிந்திருக்கின்றன. அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் வெறும் நாடாளுமன்ற ஆசனங்களுக்கு மாத்திரம்தான் மு.காங்கிரசுக்கு வாக்களித்தார்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைமை என்பது அதன் வாக்கினைக் காப்பாற்ற வேண்டும். வாக்குத் தவறினால், தலைமைக்கு எதிராக எதைச் செய்தாலும் நான் பொறுத்துக் கொள்வேன். நான் வாக்குத் தவறினேன் என்பதற்காக, எமது கட்சியோடு கோபித்துக் கொள்பவர்கள் அட்டாளைச்சேனையில் இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோடு கோபித்துக் கொண்டால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைத் தண்டிக்க வேண்டும். தலைவரைத் தலைமைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டுமென ஒரு நடவடிக்கை எடுத்தால், அதனோடு நான் உடன்பட்டுப் போவேன். ஆனால், மு.காங்கிரசை எதிர்த்து, தமக்குத் தாமே அட்டாளைச்சேனை மக்கள் அநியாயம் செய்து கொள்ள மாட்டார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று, மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மு.கா. தலைவர் ஹக்கீம் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேசம் அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே மு.காங்கிரசைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பிரதியமைச்சர்களாப் பதவி வகிக்கின்றனர். அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் ‘சில மாவட்டங்களில் நிறைய நாடாளுமன்ற ஆசனங்கள் குவிந்திருக்கின்றன’ என்று மு.கா. தலைவர் கூறினார். அவ்வாறான மாவட்டங்களுக்கு மென்மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கொடுக்க முடியாது என்று சொல்லியிருந்தார். இதன் மூலம் அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ இல்லை என்பதை ரஊப் ஹக்கீம் உறுதிப்படுத்தியும் விட்டார். ஆனாலும், தற்போது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹசனலியும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அந்த வகையில், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைக் கொடுக்க முடியாமைக்கு, மு.கா. தலைவர் கூறிய ‘நியாயம்’, இந்த இடத்தில் பிழைத்துப் போவதாகவே தெரிகிறது.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று, மு.கா. தலைவர் மிகப் பகிரங்கமாகத் தெரிவித்த பிறகும், அந்தப் பிரதேசத்திலுள்ள சிலர், தொடர்ந்தும் தேசியப்பட்டிலைக் கோருவதும், ‘அட்டாளைச்சேனைக்கு நிச்சயமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தலைவர் ஹக்கீம் தருவார்’ என்று, தொடர்ந்தும் பிரசாரம் செய்து வருவதும், என்ன வகையான மனநிலை என்று புரியவில்லை. ‘அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் இனி கிடையாது’ என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் தெளிவாகவும், உறுதியாகவும் கூறிவிட்ட பிறகும், அட்டாளைச்சேனையிலுள்ள மு.கா.வின் சில உள்ளுர் அரசியல்வாதிகள், ‘தேசியப்பட்டியல்’ என்கிற ‘பலாப்பழத்தை’க் காட்டி, அங்குள்ள மக்களிடம் இன்னமும் அரசியல் செய்ய முற்படுகின்றமையானது விசனத்துக்குரியதாகும்.

மு.கா. தலைவர் ஹக்கீம், தன்னால் முடியாத காரியங்களை ‘முடியாது’ என்று, அநேகமாக நேரடியாகக் கூறுவதில்லை என்கிற விமர்சனமொன்று பரவலாக உள்ளது. சுற்றி வளைத்து, வார்த்தை ஜாலங்களால் மழுப்பி பதில் சொல்வதில் மு.கா. தலைவர் சாமர்த்தியர் என்றும் அரசியல் அரங்கில் கூறுவார்கள். ஆனாலும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வழங்க முடியாது என்பதை, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மிகவும் தெளிவாகவும், நேரடியாகவும் – அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைத்துத் தெரிவித்திருந்தார். ஒருவகையில் இது பாராட்டுக்குரிய விடயமாகும். முடியாததை ‘முடியாது’ என்று கூறியமையினூடாக, அட்டாளைச்சேனை மக்கள் தொடர்ந்தும் ‘தேசியப்பட்டியலை’ எதிர்பார்த்து ஏமாறுகின்ற நிலைமையினை மு.கா. தலைவர் தவிர்த்திருக்கின்றார்.

இருந்தபோதும், அட்டாளைச்சேனையிலுள்ள மு.கா.வின் சில உள்ளுர் அரசியல்வாதிகள், மு.கா. தலைவர் சொன்ன சேதியினை தலைக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை போலதான் தெரிகிறது. ‘தேசியப்பட்டியல்’ அட்டாளைச்சேனைக்கு இல்லை என்று மு.கா. தலைவர் கூறிவிட்ட பிறகும், ‘எனக்குத்தான் தேசியப்பட்டியல் தரவேண்டும்’ என அங்குள்ள சிலர், இன்னும் கோரி நிற்கின்றமையினைக் காண முடிகிறது. இந்த நிலைவரமானது, ‘இல்லாத தேசத்துக்கு ராசாவாகும்’ ஆசைக்கு ஒப்பானதாகும். தேசியப்பட்டியல் மயக்கம் அட்டாளைச்சேனையிலுள்ள சிலருக்கு இன்னும் தெளியவில்லை என்பதற்கு, இது ஓர் உதாரணமாகும்.

இந்த நிலையில், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள், அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலியைக் குறிவைத்து மிக மோசமான பிரசாரங்களில் ஈடுபடுகின்றமையினையும் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அட்டாளைச்சேனைக்கு கிடைக்கவிருந்த ‘தேசியப்பட்டிலை’ தட்டிப் பறித்த துரோகி என்று, ஹசனலியை இவர்களும், இவர்கள் சார்பானவர்களும் திட்டிப் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது – ‘எய்தவனை விட்டும், அம்பினை நோகும்’ சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும். ‘அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியலைத்தான் ஹசனலிக்கு வழங்குகிறேன்’ என்று மு.கா. தலைவர் ஹக்கீம் எந்தவொரு இடத்திலும் சொல்லியிருக்கவில்லை. ‘தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எனக்குத் தேவையில்லை, அதனை அட்டாளைச்சேனைக்கு வழங்குங்கள்’ என்று, சில மாதங்களுக்கு முன்னர் ஹசனலி கூறியிருந்தபோதும், அதனை ஹக்கீம் நிறைவேற்றவுமில்லை. ஆக, ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கப்போகும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திளூ ‘அட்டாளைச்சேனையின் பங்கினை, ஹசனலி பறித்தெடுத்து விட்டார்’ என்று கோசமிடுகின்றமையானது, இயலாமையின் வெளிப்பாடாகும். ‘அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருவேன் என்று வாக்குறுதிகளை வழங்கி விட்டு, ஏன் ஏமாற்றினீர்கள்’ என்று, மு.கா. தலைவரிடம் கேட்பதற்கான திராணியற்றவர்களின் கூச்சல்தான், ஹசனலிக்கு எதிரான கோசமாக வெளிக்கிளம்பி வருகிறது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக் பெற்றெடுத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும், சுழற்சி முறையில்தான் வழங்கப்பட்டுள்ளதாக மு.காங்கிரசில் ஒரு பேச்சு உள்ளது. அப்படிப்பார்த்தால், தௌபீக்கிடமுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது, இன்னும் ஓரிரு வருடங்களில் கழற்றியெடுக்கப்பட்டு, வேறொருவருக்கு வழங்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதன்போதும் தேசியப்பட்டியலுக்கான போராட்டத்தில் பல பிரதேசங்களும், நபர்களும் களத்தில் குதிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அப்படிப் பார்த்தால், நாடாளுமன்றம் கலையும் வரை, மு.கா.வின் தேசியப்பட்டியல் விவகாரம் தீரப்போவதில்லை போலதான் தெரிகிறது. தேசியப்பட்டியல் என்கிற ‘தலைவலி’யிலிருந்து மு.கா. தலைவரும் தப்பிப்பதற்கான சந்தர்ப்பமும் குறைவாகவே உள்ளது.

தேசியப்பட்டியல் என்பது மு.கா. தலைவருக்கு ஒரு வகையான தலைவலியாக மாறியிருப்பதற்கு, அவர்தான் காரணமாவார். பொதுத் தேர்தல் காலத்தில், எல்லாப் பிரதேசங்களின் வாக்குகளையும் தமக்கே பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில், ‘தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் வழங்குவேன்’ என்று, அநேகமான ஊர்களுக்கு, ஹக்கீம் வாக்குறுதி வழங்கியமையின் தண்டனையினைத்தான், இப்போது தேசியப்பட்டியல் ‘தலைவலி’யாக – அவர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார் என்று, மு.காங்கிரசின் முக்கியஸ்தர்களே வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்துக்கு தேசியப்பட்டியல் மூலம் 29 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். அரசியலில் நேரடி ஈடுபாடுகளைக் கொண்டிராத நாட்டிலுள்ள புத்திஜீவிகள், அறிஞர்கள் மற்றும் சமூக அக்கறையாளர்களை நாடாளுமற்றுக்குக் கொண்டு வந்து, அவர்களின் புலமையினை தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே, தேசியப்பட்டியல் முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுகின்றவர்களில் கணிசமானோரைப் பார்க்கும் போது சிரிப்பாகவும், கவலையாகவுமுள்ளது. சண்டியர்கள், பணக்காரர்கள், கட்சித் தலைவரின் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் என்று, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு வருகின்றவர்களின் பட்டியல் நீளமானதாகும்.

புதிய அரசியலமைப்பிலாவது இந்த நிலை மாற்றப்படுதல் வேண்டும். அநேகமான ‘தேசியப்பட்டியல்’கள் இப்போது துஷ்பிரயோகம் செய்யப்படுகிறன. புதிய அரசியல் யாப்பில் தேசியப்பட்டியல் என்கிற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும். அல்லது, அது எதற்காக அறிமுகம் செய்யப்பட்டதோ, அதன் இலக்கினை அடைவதற்கான வழிமுறைகள், புதிய அரசியல் யாப்பில் கடுமையாக உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

தேசியப்பட்டியல் என்பது, தற்போது ‘அதிஷ்ட லாபச் சீட்டு’க்கு ஒப்பானதாகி விட்டது என்று சொன்னால், உங்களில் யார் அதை மறுக்கப் போகிறீர்கள்.

நன்றி: தமிழ் மிரர் (27 டிசம்பர் 2016)

Comments