‘மலை’யை இழந்த துயரம்!

🕔 May 22, 2015

masoor

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்றாகும்

  • மப்றூக்

சில மனிதர்கள் மரணித்தால், மலை சாய்ந்து போனதாகச் சொல்வார்கள்.  உண்மையில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மரணம் – அந்த உதாணரத்துக்கு மிகப் பொருத்தமானதாகும். சமூகத்துக்குள் அவருக்கிருந்த பெறுமானமும், அவரின் தோற்றமும் ‘மலை’யளவானது. மசூர் சின்னலெப்பை மரணித்த போது, ஊரே திரண்டு வந்து அழுத காட்சியானது, ஒரு ‘மலை’யை இழந்து விட்ட துயரை வெளிப்படுத்தியது.

மசூர் சின்னலெப்பை இருக்குமிடம் கலகலப்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமிருக்கும். எல்லோரோடும் நட்புடன் பழகும் குணம் கொண்டவர். இயல்பில் அடுத்தவருக்கு உதவுகின்றவராக அவர் இருந்தார். அதிலும், ஒரு தொழிலதிபராகவும்  – அரசியல்வாதியாகவும் இருந்ததால், அள்ளிக் கொடுக்கும் அவரின் குணம் இன்னும் அதிகமானது.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் 1955 ஆம் ஆண்டு பிறந்த மசூர் சின்னலெப்பை, தனது 39 ஆவது வயதில் – ஐ.தே.கட்சியினூடாக அரசியலுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் அட்டாளைச்சேனைச்சேனை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் அதே சபையின் தவிசாளராகத் தெரிவானார். அதன் பிறகு, முதலாவது கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரானார்.

மசூர் சின்னலெப்பை ஐ.தே.கட்சியில் இருந்த போது, அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவி வகித்தார். இந்தப் பதவி மூலம், பல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இவ்வாறானதொரு காலப் பகுதியில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் மசூர் சின்னலெப்பை இணைந்து கொண்டார். அவரின் அந்த இணைவானது, முஸ்லிம் காங்கிரசை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் தூக்கி நிறுத்தியது. அதேபோல, இந்தக் காலப் பகுதியில்தான் மசூர் சின்னலெப்பையின் அரசியல் வாழ்க்கையும்  வேறொரு பரிணாமத்தைப் பெற்றது.

மசூர் சின்னலெப்பைக்கு அரசியல் ஒன்றும் புதிதாக இருக்கவில்லை. அவரின் தந்தை ஓர் அரசியல்வாதி. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மசூர் சின்னலெப்பையின் தந்தையாரும் பதவி வகித்திருந்தார். ‘சின்னலெப்பை சேர்மன்’ என்றால்தான், மசூரின் தந்தையை ஊர் அறியும். பின்னாளில், தந்தை போன்றே தனயனும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளராகத் தேர்வானார்.

மசூர் சின்னலெப்பை மரணித்து மூன்றாண்டுகள் நிறைவடையும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று அட்டாளைச்சேனையில், மசூர் சின்னலெப்பையின் பெயரில் சந்தைச் சதுக்கக் கட்டிடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தைக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், அந்தக் கட்டிடத்தை மசூர் சின்னலெப்பையின் மூத்த புதல்வர் றியா மசூரைக் கொண்டு திறந்து வைத்தமையானது நெகிழ்வானதொரு விடயமாகும்.

அரசியலுக்கு அப்பாலும் மசூர் சின்னலெப்பை மக்களால் நேசிக்கப்பட்டார். அதனால்தான், அந்த மனிதர் மறைந்த பிறகும், மக்கள் அவரை அன்போடு நினைவு கூருகின்றனர்.

மசூர் சின்னலெப்பை மிகச் சிறந்ததொரு விளையாட்டு வீரராக இருந்தார். குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய வெற்றிகள் மற்றும் திறமைகள் குறித்து, இன்றும் பலர் பேசிக் கொள்வார்கள். தூரத்தை மிக வேகமாக ஓடிக் கடக்கும் அந்த வீரர், காலத்தையும் மிக வேகமாகக் கடந்து போனார். 56 வயதுக்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு, இதே போன்றதொரு மே 22 ஆம் நாளில், மசூர் சின்னலெப்பை எனும் அந்தப் பெருமகன், மரணத்தின் மடியில் உறங்கிப் போனார்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும், அவருக்கு உயர் சுவர்க்கம் கிடைக்கவும் இன்றைய தினத்திலும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!

Comments

புதிது பேஸ்புக் பக்கம்