இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்; நழுவியது அமெரிக்கா

🕔 December 25, 2016

israel-064ஸ்ரேல்  ஆக்கிரமிப்பு பகுதிகளில் யூத குடியிருப்புகளை அமைக்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கிடையிலான பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளும் போராடி வருகின்றன.

ஐ.நா. சபையில் ஒவ்வொரு முறையும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் போது, அந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்துவிடும்.

தற்போது கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலிய அரசு, யூதர்களுக்காக குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, ஐ.நா. சபையில் எகிப்து – தீர்மானமொன்றினைக் கொண்டு வந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் தலையீட்டால், எகிப்து தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றது. எனினும் அதே தீர்மானத்தை மலேசியா, நியூசிலாந்து, செனகல் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகள் ஐ.நா. சபையில் மீண்டும் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.

வழக்கமாக தனது வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்துவிடும். ஆனால் இந்த தீர்மானம் மீதான வாக் கெடுப்பின்போது, அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்தவில்லை. எனினும் அந்த நாடு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இதர 14 நாடுகளும் ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

ஆயினும், ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்