நண்பர் சல்மானுக்கு தூதுவர் பதவி பெற்றுக்கொடுக்க, ஹக்கீம் யோசனை

🕔 December 22, 2016

Article - Nifras - 011– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவினை ராஜிநாமாச் செய்வதற்கான கடிதத்தினை வழங்கியமையினை அடுத்து, அவருக்கு வேறொரு பதவியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டு, மு.கா. தலைவரின் உத்தரவுக்கிணங்க அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான், தனது பதவியை ராஜிநாமாச் செய்யும் கடிதத்தினை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் ராஜிநாமாச் செய்யும் சல்மானுக்கு, வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கான யோசனை மு.கா. தலைவரிடம் உள்ளதாக, மு.காங்கிரசின் உள்ளகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், அவருடைய அமைச்சின் கீழ் இயங்கிய இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியினை, சல்மானுக்கு ஹக்கீம் வழங்கியிருந்தார். ஆனால், அந்த நிறுவனம் ஹக்கீமுடைய அமைச்சிலிருந்து எடுக்கப்பட்டு, பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால்,  சல்மான் அந்தப் பதவியினை இழந்தார்.

இந்த நிலையிலேயே மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக வழங்குவதாகக் கூறி, சல்மானிடம் ஹக்கீம் ஒப்படைத்தார்.

எவ்வாறாயினும், தற்காலிகமாக வழங்கப்பட்ட அந்தப் பதவியினை 16 மாதங்களாக சல்மான் வகித்து வந்துள்ளார்.

இதன்போதே, தனது பதவியை ராஜிநாமாச் செய்யும் கடிதத்தினை தற்போது சல்மான் ஒப்படைத்துள்ளார்.

எனவே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் சல்மானுக்கு, வெளிநாட்டு தூதுவர் பதவியொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் யோசனையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் உள்ளார் எனக் கூறப்படுகிறது.

மு.கா. தலைவர் ஹக்கீமும், சல்மானும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்