ஹக்கீம் – ஹசனலி சந்திப்பு; உடனடியாக எம்.பி, பின்னர் செயலாளர் பதவியினை வழங்குவதாக வாக்குறுதி

🕔 December 16, 2016

hasanalihakeem-086– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாகவும், ஒரு மாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டினைக் கூட்டி, அதனூடாக சகல அதிகாரங்களையும் கொண்ட செயலாளர் பதவியினை வழங்குவதாகவும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், செயலாளர் நாயகம் ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கட்சியின் பிரதித் தலைவர் யு.ரி.எம். அன்வரின் கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின்போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் இந்த வாக்குறுதியினை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்திக்கும் பொருட்டு, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி, உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் –  இன்று வெள்ளிக்கிழமை காலை, தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்துக்குச் சமூகமளித்துள்ளனர். மு.காங்கிரசின் செயலாளர் பதவி குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தீர்வொன்றினைக் காண்பதற்காகவே, இவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்திக்கின்றனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், கட்சியின் உப செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மற்றும் பிரதித் தலைவர் யு.ரி.எம். அன்வர் உள்ளிட்டோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்துக்கு சமூகமளித்துள்ளதாக அறிய முடிகிறது.

எது எவ்வாறாயினும், ரஊப் ஹக்கீம் வழங்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்றும், ஹசனலி மீண்டுமொரு முறை ஹக்கீமால் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும், மு.காங்கிரசின் பிரமுகர் ஒருவர் புதிது செய்தித் தளத்துக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்