புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க

🕔 December 10, 2016

Champika ranawaka - 01புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது நிச்சமாகத் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் – புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்காது என்பதால், வடபகுதி மக்கள், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் எனவும் வடக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகிறது என கூறி, தென் பகுதி மக்கள் அதனை தோற்கடிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் அணியும், ஜாதிக ஹெல உறுமயவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியும் சில விடயங்களுக்கு எதிர்ப்பை முன்வைத்துள்ளது.

மேலும் அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் பற்றிய விவகாரம் போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள், சர்வஜன வாக்கெடுப்பின் போது – பாதிப்பாக அமையும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி எவ்வித யோசனைகளையும் முன்வைக்கவில்லை என்பதுடன், புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுவதையும் தவிர்த்து வருகிறது.

அத்துடன் அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கை குழுவின் கூட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணியும், ஜாதிக ஹெல உறுமயவும் கலந்து கொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்புச் சட்டம் அவசியமில்லை எனவும், தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்தால் மாத்திரமே தமது கட்சி அதற்கு இணங்கும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து, பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கும் யோசனைக்கு ஜாதிக ஹெல உறுமய இணக்கம் வெளியிடவில்லை.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் தனது இணக்கத்தை வெளியிட்டுள்ளதுடன், மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய அது நடைபெற வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனிடையே 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியின் கீழ் போட்டியிட, சில அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இந்த அரசியல்வாதிகளில் முன்னிலையில் இருப்பதாக பேசப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 2020 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் என்ற நம்பிக்கையில், ரவி கருணாநாயக்க மற்றும் தயா கமகே ஆகிய அமைச்சர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்