மு.கா. செயலாளர் பற்றிய விபரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து நீக்கம்
– முன்ஸிப் அஹமட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் யார் என்பது தொடர்பான விபரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களும், அவற்றின் சின்னங்கள், செயலாளரின் பெயர் மற்றும் கட்சியின் விலாசம் ஆகிய விடயங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் யார் என்பது பற்றிய விபரம் நீக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே, அந்தப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் என்பரை, அந்தக் கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார்.
இதற்கமைய, ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் எனும் பெயரை, மு.கா. செயலாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் காட்சிப்படுத்தியிருந்தது.
இதனையடுத்து கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தார். கட்சியின் செயலாளராக தானே தெரிவு செய்யப்பட்டதாகவும், மு.காங்கிரசின் உயர்பீட செயலாளராகவே ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் என்பவர் தெரிவு செய்யப்பட்டதாகவும் குறித்த கடிதத்தில் ஹசனலி குறிப்பிட்டிருந்தார். ஆயினும், செயலாளர் பதவிக்கு தனது பெயரை அறிவிப்பதற்குப் பதிலாக மன்சூர் என்பவரின் பெயர் சூழ்ச்சிகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹசனலி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, கடந்த நொவம்பர் 16ஆம் திகதியிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார். இம்மாதம் 15ஆம் திகதிக்குள் மு.காங்கிரசின் செயலாளர் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினைக் காணுமாறு அந்தக் கடிதத்தில் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
அதுவரை, மு.காங்கிரசின் செயலாளர் எனும் நிரலில் – யாரின் பெயரையும் தாம், காட்சிப்படுத்தப் போவதில்லை என்றும், அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிணங்கவே, மு.கா.வின் செயலாளர் யார் என்பது தொடர்பான விபரம் நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட அந்த இடத்தில், ‘குறித்த பதவியினை எதிர்தரப்பு உரிமை கோரியுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்பான செய்திக்கு: மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு