எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி

🕔 July 2, 2015

Hasan Ali - UNP - 01-எம்.சி. அன்சார் –

திர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும், அனைத்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியீட்டுவதோடு,  ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்படவார். இதனை எச்சக்திகளினாலும் தடுத்த நிறுத்த முடியாது என – ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி தெரிவித்தார்.

எதிர்வருகின்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று, சம்மாந்துறையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு  உரையாற்றும்போதே ஹசன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் போராட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட்டதுடன், அவரை ஜனாதிபதியாக்குவதற்து தன்னையே அர்ப்பணித்தவர் பிரதமர் ரணில் விக்கிரசிங்க என்பதனை எவரும் மறக்கமுடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் கடந்த ஆறு மாதகால ஆட்சியானது, நாட்டில் ஜனநாயகத்தின் உண்மையான பெறுமானத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்க்ஷ, இனவாத அரசியலுக்குள் ஒழிந்து கொண்டு,  மீள் எழுச்சி பெறும் அளவுக்கு அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளார். அதிகாரத்தை கைப்பற்ற எதனையும் செய்யவுள்ளார். மஹிந்தவுடைய மீள் வருகையினைத் தோற்றகடிக்க வேண்டும். அவர் அரசியலில் மீண்டும் தலைதூக்குதவற்கு – மக்கள் இடமளிக்கக்கூடாது.

எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத உணர்வலைகளை சிங்கள மக்களின் மத்தியில்  விதைத்து, சிங்கள மக்களின் அனுதாபத்தின் மூலம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியினை பிடிக்கலாம் என – மஹிந்த ராஜபக்ஷ கனவு காண்கின்றார். இவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

முற்றுமுழுதாக இனவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மீண்டும் அதிகாரத்து வரும் பயணத்தில் இறங்கி இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, முறையான பாடத்தை மீண்டும் கற்பிக்க வேண்டும். இதற்காக, பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் கரங்களை நாட்டு மக்கள் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனின் மீண்டும் கொடுங்கோல் ஆட்சியும், ஊழல் மோசடிகளும் தலைவிரித்தாடக்கூடிய சூழ்நிலை தோற்றுவதை தடுக்க முடியாமல் போகும்.

ஐக்கிய தேசியக் கட்சியானது எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் சக்திமிக்கதான அரசாங்கம் ஒன்றை அமைத்து, ஊழலற்ற நல்லாட்சிமிக்க ஜனநாயகத் தன்மையுடைய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்தவையும், அவரது அணியினரையும் தோற்கடித்து – நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தினை  மீளவும் தோற்றுவிக்க வேண்டும். அதற்காக நாட்டு மக்கள்  அனைவரும்  ஒன்றுபட்டு மஹிந்தராஜபக்ஷவின் – மிகுதி அரசியல் பகுதியையும் தோற்கடிக்க வேண்டும்.

யுத்த வெற்றிக்கோஷம், இன அடக்குமுறை, மத ஒடுக்குமுறைகள் மூலம் – நாட்டின் ஜனநாயகத்தினை கேள்விக் குறியாக்கி, சர்வாதிகாரப் பாதையில் ஆட்சியை கொண்டு சென்ற மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசியல்  மீள்எழுச்சியானது,  நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்கு இட்டுச்செல்லும். அதனை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இவரை எதிர்வருகின்ற தேர்தலில் நிரந்தரமாக மெதமுலனைக்கு அனுப்ப வேண்டும்.

எனவே, நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததன் பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியின் செல்வாக்கானது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால், எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை  தடுக்க முடியாது” என்றார்.

Comments