அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

🕔 December 6, 2016

akp-ze-office-01234– அஹமட் –

க்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இந்த நிலையில், குறித்த கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கான வெற்றிடங்களுக்கு பலர் விண்ணப்பித்துள்ள போதும், அவர்களுக்கான நேர்முகப்பரீட்சை இதுவரையில் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடைய அசமந்தப் போக்கு காரணமாகவே, குறித்த நேர்முகப் பரீட்சை நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக தெரியவருகிறது.

மேற்படி கோட்டக் கல்வி அதிகாரி பதவிகளுக்கு, தகுதிவாய்ந்த பலர் விண்ணப்பித்துள்ள நிலையிலேயே, இந்த இழுத்தடிப்பு நடைபெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாடசாலைகளிலும், கல்வி நிர்வாக நடவடிக்கைகளிலும் அரசியல் தலையீடுகள் இடம்பெறக்கூடாது என்று – கிழக்கு மாகாண முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் தைரியத்துடன் பகிரங்கமாக கூறியுள்ள நிலையில், மேற்படி இருவரும் வீற்றிருக்கின்ற கிழக்கு மாகாண சபையில் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள், இவ்வாறு அலட்சியமாக நடந்துகொள்வது நல்லாட்சிக்கும், மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் கொள்கைகளுக்கு முரணான விடயமாகும்.

எனவே, பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டக்கல்விகளுக்கான அதிகாரிகளை நியமிக்கும் விடயத்தில், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதோடு, பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை திறம்பட செயற்;படுத்துவதற்கு, பொருத்தமானவர்களை எதுவித அரசியல் தலையீடுகளுமின்றி நியமிக்குமாறு கல்வி சமூகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments