பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

🕔 December 4, 2016

article-basheer-011– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) –

ற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டம் , இனப் பிரச்சினை ஒரு போராக உருவெடுத்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான கைது தொடக்கம் ,கால வரையறையற்று தடுத்து வைத்தல் உட்பட பாதுகாப்புத் தரப்பினால் செய்யப்படும் கொலையைக் கூட எவரும் கேள்வி கேட்க முடியாது என்பது வரை – மோசமான அராஜக செயற்பாடுகளை செய்து வந்தனர். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அசௌகரியத்துக்கு ஆளாயினர். மிக மோசமாக தமிழர்களே பாதிக்கப்பட்டனர்.

போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்த போதும் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை.புதிய அரசிடம் இச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று சர்வதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிக்கல்களை இலங்கை எதிர் நோக்கியுள்ள இத்தருணத்தில், இந்தக் கோரிக்கையை செவியேற்று ஒழுக வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலீடாக வேறு ஒரு சட்டத்தை நிறைவேற்றி இடைவெளியை நிரப்ப தயாராகிவிட்டது.

இந்தப் பணியை இலகுபடுத்த, இட்டு நிரப்பும் புதிய சட்டமூலம் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இப்புதிய சட்டமூலம் தமிழ் மக்களை பாதிக்காது என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதன் மூலம் பேச்சு நடைபெற்றிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் உள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களையும், இன்னும் சில முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஜனாதிபதியும், பிரதமரும் அழைத்து இப்புதிய சட்டமூலத்துக்கான ஆதரவைப் பெற்றுள்ளனர் என அறியமுடிகிறது.

முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டமூலம்’ என்ற சொற் பிரயோகமே ஆபத்தானதாகப் தெரிகிறது.

இன்றைய காலத்தில் இனப்பிரச்சினை சார்பான – யுத்தம் இல்லாத சூழலில் பயங்கரவாதம், முறியடிப்பு ஆகிய சொற்பிரயோகத்தை ஒரு சட்ட கட்டுமானத்துக்குள் ( Legal framework) கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன? முன்னைய சட்டம் தமிழர்களை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டது, அதற்கு அவர்தம் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கவில்லை. தற்போதைய சட்டத்தின் மூலம் எந்த சமூகம் இலக்கு வைக்கப்படுகிறது என ஆராய்ந்து அறியாமலும், சுமந்திரன் இச்சட்டம் தமிழரைப் பாதிக்காது என அத்தாட்சிப்படுத்தி இருக்கும் நிலையிலும் முஸ்லிம் தலைவர்கள் எப்படி ஒப்புதல் அளிக்க முடியும்?

முன்னையது பயங்கரவாதத்தை தடை செய்கிற அடிப்படையிலான சட்டம்தான். ஆனால் மேற்சொன்ன சட்டத்துக்கு பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டம் ‘பயங்கரவாதத்தை முறியடிக்கிற’ வகையிலானது என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நகர்வு யாரைத் திருப்திப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது? இந்து சமுத்திரத்தின் பிராந்திய நலனை பேணுவதற்கான எவர் எவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையின் ‘எந்த மக்களை’ பலி கொடுக்க தயார்படுத்தல் நடக்கிறது?

இன்று பூகோள அளவில் ‘பயங்கரவாதம்’ என்று சோடிக்கப்பட்டிருப்பதும், ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் முஸ்லிம்களுக்குள் இடம் பெறும் ஆயுதச் சண்டையைத்தான் என்பது ரகசியமல்ல. கிறிஸ்தவ, இந்து, யூத அல்லது பௌத்த பயங்கரவாதம் என்று உலகளவில் ஒட்டுமொத்தமாக எதுவும் அடையாளப்படுத்தப்படவில்லை.எனவே உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டம் முஸ்லிம் அடையாளத்தையே குறி வைக்கிறது என்பது கண்கூடு.

இன்னும் நாட்டு மக்களோடு ஆலோசிக்காத நிலையில் தயாரிக்கப்பட்டிருக்கும் உத்தேச சட்டமூலத்தின் பிரதிகள் , ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் பல உப அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்டம், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கி வரையப்பட்டுள்ளது. முக்கியமாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்ததை விட ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கு மிகவும் பரந்த அளவிலான குற்றச் செயல்களை உள்வாங்கக் கூடியவாறு இப்புதிய சட்டத்தில் பிரமாணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என அறியக் கிடைக்கிறது.

ஒரு மௌலவி ஓதும் குத்பாவை பொறுத்து அவரை கைது செய்யவும், இஸ்லாமிய பிரச்சார நடவடிக்கைகளை முடக்கவும், இஸ்லாமிய இயக்கங்களை தடை செய்யவும், ஏன் – முழு முஸ்லிம் நவீன சமூகக் கட்டமைப்புக்குள் இருக்கும் அனைத்து அங்கங்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தவும், அல்லது கட்டுப்படாதவிடத்து கைது செய்து தண்டனை வழங்க முடியுமான ஏற்பாடுகள் இச்சட்ட மூலத்தில் இருக்கிறது என்பது அச்சமாகும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம் என்று அமைச்சர் விஜேதாச சொல்வதை கணக்கில் எடுக்காமல் இருக்கவோ, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் செயலாளர் றாஸிக் கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கையில் ‘இல்லாத முஸ்லிம் தீவிரவாதத்துக்கு’ ஒரு புதிய சேமிப்புக் கணக்கு திறக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கவோ முஸ்லிம்களால் முடியாது.

எனவே, இந்தப் பின்னணியில் சட்டவாக்கிகளான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் மற்றம்  முஸ்லிம் குடிமைச் சமூகமும், இச்சட்டமூலத்தின் பாரதூரத்தை புரிந்து கொண்டு, கலந்து பேசி தமது கருத்துக்களை இச்சட்ட மூலத்துள் உள்வாங்கச் செய்யவும், நமது சந்ததிகளின் எதிர்கால சுதந்திரமான இருப்புக்கு ஆபத்தை உண்டுபண்ணக் கூடிய சரத்துகள் மறைந்து கிடந்தால் அவற்றை இனங்கண்டு நீக்கவும் உறுதியுடன் உழைக்கவேண்டும்.

Comments