வேட்டைப் பல் கதை

🕔 December 1, 2016

article-basheer-0987லங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம், “இடைவிடாது ஒரு பொய்யைத் தொடர்ந்தும் சொல்லி வந்தால் அது உண்மையாக உருவெடுக்கும்” என்று, ஹிட்லருக்கு கொயபெல்ஸ் சொல்லிக்கொடுத்த உபாயத்தை இங்கு பிரயோகம் செய்து பார்க்கிறார்கள் என – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் ‘POLITICAL VISION CARE 2’ எனும் தலைப்பில் அவர் இன்று வியாழக்கிழமை எழுதியுள்ள பதியுள்ள பதிவிலேயே, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

32 இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ளனர் என்ற நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவின் நாடாளுமன்ற பிரகடனத்தின் பின் நடந்தேறிய, முஸ்லிம் தரப்பினரின் எதிர் வினைகள் பற்றி அவதானித்த பின்னர் கீழ்வரும் பதிவை இடுகிறேன்.

அமைச்சரின் மேற்குறித்த கருத்தினை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் ஊடக அறிக்கைகளை விட்டும், நாடாளுமன்றத்தில் உரைகளை ஆற்றியும் தங்கள் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்திருந்தனர்.

ஐம்மியதுல் உலமா சபை – முஸ்லிம் அரசியல்வாதிகளை அழைத்து இவ்விடயமாக கருத்துப் பரிமாறலைச் செய்தது.

முஸ்லிம் சிவில் அமைப்புகளும், அரசியலாளர்களும் குறித்த அமைச்சரை சந்தித்து தங்கள் ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

சிங்கள பௌத்த பேரினவாதிகள் கடந்த நான்கு வருடங்களாக – இடைவிடாது, இலங்கை முஸ்லிம்களுக்குள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் உள்ளனர் என்ற மாந்திரீகத்தை தவணை முறை அடிப்படையில் ஓதி வருகிறார்கள். இராணுவ, பொலிஸ் பேச்சாளர்களும் – ஒரு தடவைக்கு மேல் இக்கருத்தை தெரித்துள்ளனர். இந்தியப் புலனாய்வாளர்களும், அந்நாட்டின் வெளியுறைத் துறையும் தங்கள் பங்குக்கு கல்லெறிந்து கலக்கியுள்ளனர்.

முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்கள், கள்ளத்தோணிகள், அதிக குடிப்பரம்பல் செய்பவர்கள், முறையற்ற வியாபாரம் செய்பவர்கள், அடாத்தாக அரச காணிகளைப் பிடிப்பவர்கள்,வெளிநாட்டு பண மோசடிக்காரர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள் மற்றம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் என்றெல்லாம் பேரினக் கும்பல்கள் சிங்கள மக்களுக்குள் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்தனர். தற்போது இலங்கை முஸ்லிம்களை சர்வதேச தீவிரவாதத்தின் ஓர் அங்கமாக சித்தரித்துக் காட்டி வருகின்றனர்.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற அஸ்திரத்தை உபயோகித்து, இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் முளைவிட்டுள்ளது என்பதை நிரூபிக்க – படாதபாடு படுகிறார்கள்.

இராணுவமும், பொலிஸும் மற்றும் இந்திய அமைப்புகள் சிலவும் இப்பேரினவாத சித்தரிப்புகளுக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலையில் அமைச்சர் விஜேதாச இக்கருத்தை நாடாளுமன்றத்தில் ஆமோதித்திருப்பதன் மூலம், மேற்சொன்னவர்கள் அனைவரது கருத்துக்களையும் அங்கீகரித்துள்ளார். மாத்திரமன்றி பேரினவாதத்தினதும், பிராந்திய மேலாதிக்கத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போயுள்ளார்.பிற்போக்குவாத பசியைத் தீர்க்க தீனி போட்டுள்ளதன் மூலம் முஸ்லிம்களின் நிம்மதியான எதிர்கால வாழ்வுக்கு உலை வைத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு தீவிரவாத தொடர்பு உள்ளது என்ற கருத்தை நாடாளுமன்றில் ஆவணப்படுத்துவதற்கு ஏதுவான உபாயமாக, பௌத்த பேரின தீவிரவாதத்துக்கு எதிரான கருத்தையும் அமைச்சர் ‘ஐசிங்’ போல தடவியுள்ளார்.

முஸ்லிம் சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் இவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் தனது கருத்தை நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறவில்லை. அவர் பின்வாங்கப் போவதுமில்லை.

இடைவிடாது ஒரு பொய்யைத் தொடர்ந்தும் கூறிவந்தால் அது உண்மையாக உருவெடுக்கும் என்று, ஹிட்லருக்கு கொயபெல்ஸ் சொல்லிக்கொடுத்த உபாயத்தை இங்கு பிரயோகம் செய்து பார்க்கிறார்கள்.

எப்படியோ இலங்கை முஸ்லிம்களை சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதம் என்ற மாயைக்குள் உள்வாங்கும் சதித்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலைமை முஸ்லிம்களை பயங்காட்டி பணிய வைக்க உதவும், முஸ்லிம் ஊர்களில் தடுப்பரண்கள் நிறுவ உதவும். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை சிலரின் விருப்பத்திற்கேற்ப வளைக்க உதவும். முஸ்லிம்களை நசுக்க உதவும். பேரின வாக்கு வங்கியை கவர அல்லது தக்க வைக்க உதவும். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்து, இதற்கு மாற்றீடாக புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்கும் (Counter Terrorist Act) சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கவும் – இச்சட்டத்தின் சரத்துகள் மூலம் மேற்குலகை திருப்திப்படுத்தவும் உதவும். முஸ்லிம் வணிகத் துறையை வலுவிழக்கச் செய்ய உதவும். முஸ்லிம் இயக்க நடவடிக்கைகளை கண்காணிக்க அல்லது கட்டுப்படுத்த உதவும். இன்ன விடயதானங்களில்தான் குத்பா பிரசங்கங்கள் செய்யப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க உதவும். இப்படி இன்னும் பலவற்றுக்கு இந்த 32 முஸ்லிம் வேட்டைப் பல் கதை உதவும்.

நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்கும் போது பங்காளிகளாக இருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உக்கிரமான போராட்டமும், ஒற்றுமையும் என்றுமில்லாத வகையில் தேவைப்படும் காலமிது. சிங்கள முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களோடும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனும், மக்கள் விடுதலை முன்னணி, இடதுசாரி கட்சிகள்மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகிய தரப்புகளுடனும் ஒற்றுமைப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அவசரமாக பேசி, முஸ்லிம்கள் சம காலத்தில் எதிர் நோக்கும் உடனடி ஆபத்தில் இருந்து தப்பிக்க ஆதரவைத் திரட்ட வேண்டும்.

சாதாரண சிங்கள மக்களுக்குள் விதைக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சு விதைகளை அழிப்பதற்கான பிரச்சாரங்களை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுடன் பேசி புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். சிங்கள சிவில் அமைப்புகளுடன் உரையாடல்களை தொடங்க வேண்டும். சொந்த சமூகத்துக்குள் – தூண்டலில் அகப்பட வேண்டாம் எனக் கூற வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்