தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம்

🕔 November 16, 2016

sumana-ratna-thero-011னியார் ஒருவரின் காணிக்குள் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இன்று புதன்கிழமை காலை நுழைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில்  உள்ள காணிக்குள் அரச மரம் இருப்பதால்,  தேரர் இவ்வாறு நுழைந்துள்ளார்.

இதன்போது, சிங்கள மக்கள் பலர் வாகனங்களில் வந்திறங்கிமையினை அடுத்து,  அங்கு பதற்றம் அதிகமானது.

குறித்த காணிக்குள் நீதிமன்ற சட்டத்தையும் மீறி, பிக்கு அத்து மீறி நுளைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், பொலிஸாரும் தேரரின் செயற்பாட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் அங்கு பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறியே, தேரர் இவ்வாறு தனியார் காணிக்குள் நுழைந்தார்.

 

இதேவேளை, குறித்த பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு விகாரை ஒன்றை அமைத்து சிங்கள மக்களை குடியேற்றப்போவதாகவும் கூறிய பிக்கு, அங்கிருந்த அரச மரத்தின் கீழ் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன்போது வெளி மாவட்டங்களில் இருந்து, பல சிங்களவர்களை தேரர் வாகனங்களில் அழைத்துவந்து குறித்த இடத்தில் அமரவைத்திருந்தார்.

மேலும்,  அரசாங்க அதிபர் வந்தால் மட்டும்தான், அந்த இடத்திலிருந்து எழும்புவேன் என்றும் தேரர் கூறினார்.

இதன்போது அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அரசாங்க அதிபரை சம்பவ இடத்திற்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தார். ஆனால், அரசாங்க அதிபர் அங்கு வரமறுத்ததுடன் பொலிஸாரை கொண்டு பிரச்சினையை தீர்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டதுடன், குறித்த இடத்திற்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுடன் இணைந்து பௌத்த பிக்குவை பொலிஸாரின் உதவியுடன் அங்கிருந்து வெளியேற்றினர்.

குறித்த காணி, இந்துக் குருக்கள் ஒருவருக்கு சொந்தமானதாகும்.

அந்தக் காணியில், விகாரை அமைப்பதற்கு சுமனரத்ன தேரர் பலமுறை முயற்சி செய்த போதும், அதனை நீதிமன்ற ஆணையின் ஊடாக தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், நீதிமன்றின் உத்தரவினையும் மீறி, இன்று தேரர் காணிக்குள் நுழைந்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற ஆணையை மீறிய பிக்குவை பொலிஸார் கைது செய்யவில்லை என்றும், நல்லாட்சி அரசாங்கம் இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றதா என்கிற சந்தேகம் நிலவுவதாகவும் நாடாளுமன்ற உறுபப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.sumana-ratna-thero-022

 

Comments