முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும்

🕔 June 29, 2015

MI. Zahirரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்வது,  பொதுவாக இன்று இலகுவாகிவிட்டது.
1.மதம்
2. அரசியல்

இவை குறித்து கருத்துச் சொல்வதற்கு, எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்கிற சுதந்திரத்தில், பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

தேர்தல் காலம் என்பதால், அரசியல் – அனைவரினதும் பேசு பொருளாகிவிட்டது.

சிலர் முழுநேரமாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர்.

விமர்சனம் ஆக்கபூர்வமாக (constructive) இருக்க வேண்டும் என்பதுதான், விமர்சனம் செய்யும் போது எதிர்பார்க்கப்படும் நிபந்தனையாகும். சிலர் தங்களது கேவலமான விமர்சனங்களை நியாயப்படுத்த ‘சமூகப் பணி’ என்று வறட்டு நியாயம் கற்பிப்பர்.

அரசியல்வாதிகளை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது. அதிகமான முதிர்ச்சியற்ற வாக்காளர்களாலேயே – அரசியல்வாதிகள் நிர்பந்திக்கப் படுகின்றனர். வாக்காளர்கள் எந்த நோக்கில் அரசியல்வாதிகளுக்கு தங்களது வாக்குகளை அளிக்கின்றனர் என்பது தொடர்பில், பரந்த ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பிரச்சினை எங்குள்ளது என அறிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக, ஊருக்கொரு எம். பி தேவை என்று – சிலர் கோஷம் எழுப்புவதோடு, மற்ற விவகாரங்களில் கணக்கிலெடுக்காத பள்ளிவாசல் நிருவாகிகளை, இதற்கு மட்டும் துணையாக தங்களோடு சேர்த்துக் கொள்வார்கள். இங்கு – அரசியல்வாதிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர். காலப் போக்கில் ஏனைய ஊர்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இப்படி ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

முஸ்லிம் அரசியலின் வீழ்ச்சிக்கு, அரசியல்வாதிகள் மாத்திரம் காரணமில்லை. முதிர்ச்சியற்ற வாக்காளர்களும் காரணமாக இருக்கின்றனர் – என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வில்பத்து விவகாரம் மற்றும் 20 ஆவது தேர்தல் திருத்தம் ஆகிய – இரண்டையும் அணுகிய விதமே, எமது முதிர்ச்சி என்ன  எனக் காட்டுகின்றது. குறிப்பாக முகநூல் அரசியல் விமர்சகர்களின் அரசியல் அலசல்கள் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த இரண்டு விடயங்களையும், ஒரு தட்டில் வைத்துப் பார்க்கும் போது, எது மிகவும் பாரதூரமானது என்பது இன்னும் சிலருக்குப் புரியாமலே உள்ளது. இதன் அர்த்தம் – வில்பத்து விவகாரம் என்பது பிரச்சினையே அல்ல என்று அர்த்மாகி விடாது. அது அம்மக்களின் அடிப்படை உரிமையாகும்.

அரசியலில் reactionary politics (எதிர்வினை அரசியல்) மற்றும் strategic politics (மூலோபாய அரசியல்) ஆகிய அணுகுமுறைகளை அரசியல்வாதிகள் கடைபிடிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால வன்முறைகளை reactionary politics என்றும் 20ஆவது தேர்தல் திருத்தத்தை strategic politics என்றும் நோக்கலாம்.

20ஆவது தேர்தல் திருத்தம் என்பது – மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டு சிறிய, சிறுபான்மை கட்சிகளை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட strategic politics (மூலோபாய அரசியல்) ஆகும். நல்லாட்சி என்ற இலக்கோடு உருவாகிய மைத்திரி அரசாங்கமானது, மஹிந்தவின் தென் பகுதி அரசியல் நெருக்குதலை முகம் கொடுக்க முடியாமல் reactionary politics (எதிர்வினை அரசியல்) அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியதன் விளைவே, புதிய அரசாங்கத்தில் தோன்றிய பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.

இது போன்ற பின்னணிக் காரணங்களை மையப்படுத்தி, எமது விமர்சனங்களையும், அரசியல் வினையாற்றுகைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கிராமிய அரசியலின் அதிருப்தியை – தேசிய அரசியலில் அளவுக்கதிகமாக கலந்துவிடக் கூடாது. அது – ஆபத்தாகிவிடும்.

இவ் விடயங்களைக் கணக்கில் எடுக்காது விடின், முதிர்ச்சியற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதென்பது, தவிர்க்க முடியாத விடயமாகி விடலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்