தனியார் பஸ் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது; நிதியமைச்சருடனான சந்திப்பின் பின் தீர்மானம்
தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நாளை செவ்வாய்கிழமை நாடு முழுவதும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், வேலை நிறுத்தத்தைக் கைவிடும் முடிவினை தாம் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கான தண்டப் பணமாக ஆகக்குறைந்த தொகையாக 2500 ரூபாவினை அறவிடவுள்ளதாக, வரவு – செலவுத் திட்ட முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதனை ரத்துச் செய்யுமாறு வலியுறுத்தும் வகையில் நாளைய தினம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், இது குறித்து தீர்மானமொன்று எடுக்கப்படும் என, இன்றைய பேச்சுவார்த்தையின் போது நிதியமைச்சர் வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க, வேலை நிறுத்தத்தினை தாம் கைவிட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
நிதியமைச்சருடனான அடுத்த சந்திப்பு நாளை மாலை இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.