இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம்

🕔 November 10, 2016

irakkamam-0093– றிஜாஸ் அஹமட் –

தேசிய இலக்கிய விழாவினையொட்டி, இறக்காமப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பல்வேறு விதமான கலை, கலாசார மற்றும் இலக்கிய நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன.

கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வினை இறக்காமம் பிரதேச கலாச்சாரப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

இறக்காமப் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அமீர், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா முசபிர் ஆகியோர் கலந்து கொண்டிருதனர்.

கலாசார ரீதியாக தொன்மை வாய்ந்த கிராமம் இறக்காமம் என்பதை, அங்கு நடைபெற்ற கலை நிகழ்வுகள் நிரூபித்து காட்டின.

இறக்காமப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அங்கு அரங்கேறியதுடன், இறக்காமத்தைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் அரேங்கேற்றப்பட்டன.

இதன்போது, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பாராட்டிப் பரிசளிக்கப்பட்டனர்.

இதேவேளை, இறக்காமத்தை சேர்ந்த ஏ.எஸ். றிழ்வான் எனும் இளைஞன், 400 மீற்றர் ஓட்டப்போட்டியில், மாகாண மட்ட சாதனை புரிந்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் மன்சூர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்;

“கலாச்சாரங்கள் அழிந்து நவீன இலத்திரனியல் உலகை நோக்கி தமது உள்ளங்களை மாற்றிக்கொள்ளும் பல்வேறு மக்களுக்கு மத்தியில், இறக்காமம் பிரதேச கலைஞர்களின் இப்பங்களிப்பானது எமது நாட்டினதும் ஊரினதும் கலாசார ரீதியான வளர்ச்சிக்கு ஒரு உற்சாகமூட்டுகிறது.

மேலும் இந்நிகழ்வு மூலம் இன ஒற்றுமைக்கான முன்னுதாரணத்தினை நமது மாணவர்களும் கலைஞர்களும் வெளிக் காட்டியுள்ளனர். இவ்வாறான கலாச்சார நிகழ்வொன்றின் மூலம் இதற்கு வழியமைத்த பிரதேச கலாச்சாரப் பேரவைக்கு எனது இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்” என்றார்.irakkamam-0097irakkamam-0095irakkamam-0097

Comments