உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

🕔 June 28, 2015

111– யூ.எல்.எம். றியாஸ் –

காரைதீவு, திருக்கோவில் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகளில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த  34 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பிரதேச செயலக பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், காரைதீவு பிரதேச சபைக்கு 18 நியமனங்களும், திருக்கோவில் பிரதேச சபைக்கு 10 நியமனங்களும், ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு  06 நியமனங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ரி. கலையரசன், எம். ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு நிரந்தரநியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

அதேவேளை, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் தற்காலிகமாகக் கடமையாற்றி வந்த மேலும் பலருக்கு, நேற்று சனிக்கிழமையும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, பொத்துவில் பிரதேச சபையில் கடமையாற்றிய 15 பேருக்கும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் – 20 பேருக்கும், சம்மாந்துறை பிரதேச சபையைச் சேர்ந்த – 34 பேருக்கும், கல்முனை மாநகர சபையில் – 19 பேருக்கும், நிந்தவூர் பிரதேச சபையில் – 12 பேருக்கும் என, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர், ஆரிப் சம்சுதீன், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் எம். இர்சாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நியமனக் கடிதங்களை வழங்கினர்.

444

Comments

புதிது பேஸ்புக் பக்கம்