வாஸ் குணவர்த்தனவின் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்துள்ளார்.
கொலைக்குற்றம் தொடர்பில் வாஸ் குணவர்த்தனவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரணதண்டனை கைதியான வாஸ் குணவர்தன, புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த நிலையிலே, இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவித்தார்.
தாம் குருநாகல் உயர் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியபோது, குறித்த பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக வாஸ் குணவர்தன கடமையாற்றியதாகவும், ஒரே பிரதேசத்தில் கடமையாற்றியதால் அவர் தொடர்பான விசாரணைகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும் இதன்போது நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.