சிலை வைப்பை நியாயப்படுத்திய மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்; மக்கள் கொதிப்பு

🕔 November 5, 2016

dcc-irakkamam-976– முன்ஸிப் அஹமட் –

றக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தில் அமைந்துள்ள மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை, மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியாயப்படுத்தி பேசியமையினை அடுத்து, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவர் எனும் வகையில், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அம்பாறையிலிருந்து வந்த சிலர், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையொன்றினை அடாத்தாக வைத்துவிட்டுச் சென்ற விவகாரம் தொடர்பாக, மேற்படி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேச்சுக்கள் எழுந்தன.

இதன்போது, கருத்துத் தெரிவித்த மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர்; “அவர்கள் எந்த இடத்திலும் சிலை வைக்க முடியும், அதற்காக அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. வைத்த சிலையை, எந்த ராசாவைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அகற்ற முடியாது அவர்கள் சிலை வைக்கும் போது, நம்மால் என்னதான் செய்ய முடியும்” என்று கூறினார்.

இதேவேளை, சிலை இருக்கும் இடத்தைச் சுற்றி, இதற்குப் பிறகு எந்தக் கட்டிடங்களையும் நிர்மாணிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை, தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூரின் இந்தக் கருத்து, அங்கிருந்தவர்களுக்கு கடுமையான அதிர்ச்சினையும், கோபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த பொதுமகன் ஒருவர்; “சிலை வைக்கப்பட்டமையினை நியாயப்படுத்திப் பேச வேண்டாம்” என்று, மன்சூரை நோக்கிக் கூறியதோடு, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை சட்டவிரோதமான செயற்பாடு என்பதை வலியுறுத்திப்  பேசினார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூரின் இந்த நியாயப்படுத்தலினைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட  இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் மு.காங்கிரஸ்  தவிசாளர் யூ.கே. ஜபீர், பல முறை தனது மாற்றுக் கருத்தினை முன்வைக்க முயற்சித்தார். ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் அதனைத் தடுத்தார். எவ்வாறாயினும், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூருடன், முன்னாள் தவிசாளர் ஜபிர், வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் – அம்பாறை மாவட்ட செயலகத்திலும் கடந்த புதன்கிழமை அரசாங்க அதிபர் துசித்த பி. வணிகசிங்க தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் எவ்விதமான எதிர்ப்பினையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: இறக்காமம் பிரதேசத்தில் புதிதாக புத்தர் சிலை: மற்றுமொரு ஆக்கிரமிப்பு; மக்கள் பிரதிநிதிகள் மௌனம்

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்