அமரதேவாவின் உடலைச் சுமந்து, மரியாதை செலுத்தினார் ஜனாதிபதி
மறைந்த இசைக் கலைஞர் பண்டித் அமரதேவவின் பூதவுடல் அடங்கிய பேழையினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமந்து வந்து, அமரதேவாவுக்கு மரியாதை செலுத்தினார்.
அமரதேவாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
இதன்போது அவரது உடல் அடங்கிய பேழையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாகனத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரை தாங்கி வந்தார்.
இசைக் கலைஞர் ஒருவரின் உடலை, இலங்கை ஜனாதிபதியொருவர் இவ்வாறு சுமந்தமை இதுவே முதல் தடவை எனக் கூறப்படுகிறது.
குறித்த ஊர்வலத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இசை மேதை அமரதேவாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து வீடுகளிலும் வெள்ளைக் கொடியை தொங்க விடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அமரதேவாவின் இறுதிக் கிரியைகள் நாளை சனிக்கிழமை மாலை 06 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.