சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

🕔 November 3, 2016

arjun-mahendran-01787த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி  தொடர்பில் மோசடிகள்,  அர்ஜுன மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில், அது குறித்து கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு பயந்து, அரஜுன மகேந்திரன் நாட்டை விட்டு ஓடி விட்டார்” என கூட்டு எதிரணியினர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் சரியாக ஒருவாரம் கழித்து இன்று அர்ஜுன மகேந்திரன் நாடு திரும்பினார்.

திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே இவர் சிங்கப்பூர் சென்றிருந்தார் எனவும், அவர் தன்னிடம் கூறிவிட்டே சென்றதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்; “என் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் நான் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், தொடர்பான அறிக்கையை கடந்த மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கோப் குழு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இதில் நேரடியாக பொறுப்பு கூறவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை, மஹரகமயில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை முறைக்கேடு தொடர்பில், நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

மேலும், அர்ஜூன மகேந்திரன் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட வேண்டும் என, கூட்டு எதிரணி பல உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அர்ஜூன மகேந்திரன் நாடு திரும்பிய இதே சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments